(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 99 (அ) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முகம்மது சாலி நழீம் சுய விருப்பத்தின் அடிப்படையில் பதவி விலகியதால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு,1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் உறுப்பினராக முகம்மது சாலி நழீம் 2024.12.03 ஆம் திகதியன்று பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவ்வாறான பின்னணியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முகம்மது சாலி நழீம் 2025.03.14 ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர சபைக்கான தலைவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முகம்மது சாலி நழீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முகம்மது சாலி நழீம் பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் முகம்மது சரிவு அப்துல் வாஸித்தின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.
இதற்கமையவாக பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித்தின் பெயரை குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளது.
No comments:
Post a Comment