காசாவில் பட்டினி மரணங்கள் அதிகரித்து சர்வதேச அளவில் அழுத்தங்களும் அதிகரித்த நிலையில் அங்கு உதவிகள் செல்வதற்காக மூன்று இடங்களில் இஸ்ரேல் இராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
எனினும் நேற்றுக் காலை தொடக்கம் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்களில் காசாவில் மேலும் 53 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
கடற்கரையை ஒட்டிய மனிதாபிமான வலயம் என ஏற்கனவே இஸ்ரேல் அறிவித்த அல் மவாசி பகுதி, மத்திய டெயிர் அல் பலா மற்றும் வடக்கே காசா நகர் ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரும் வரை உள்ளூர் நேரப்படி காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்தது.
காசாவில் உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதற்கு காலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு இடையே பாதுகாப்பான பாதைகளும் அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.
இந்நிலையில் ஒதுக்கப்பட்ட பகுதியில் போர் நிறுத்த காலத்தில் பட்டினியில் உள்ளவர்களுக்கு உணவு அளிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான தலைவர் டொம் பிட்சர் தெரிவித்துள்ளார்.
‘எமது குழுக்கள் களத்தில் உள்ளன. இந்த வாயில் ஊடாக எம்மால் முடிந்த அளவில் பட்டினியில் உள்ள மக்களை அடைவதற்கு நாம் முயற்சிப்போம்’ என்று அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் கடந்த மார்ச் மாதம் ஆரம்பம் தொடக்கம் முடக்கி வரும் நிலையில் அங்கு பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் இரு குழந்தைகள் உட்பட ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு மேலும் ஆறு பலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று குறிப்பிட்டது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கான் யூனிஸில் உள்ள நாசர் வைத்தியசாலையில் செய்னப் அபூ ஹலீப் என்ற ஐந்து மாத குழந்தை ஒன்று உயிரிழந்ததாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்தனர்.
‘மூன்று மாதங்களாக வைத்தியசாலைக்குள் இருந்தேன், அதற்கு ஈடாக எனக்கு இதுதான் கிடைத்தது. அவள் இறந்துவிட்டால்’ என்று அந்த குழந்தையின் தாயான இஸ்ரா அபூ ஹலீப், வெள்ளை துணியால் போர்த்தப்பட்ட குழந்தையின் உடலை சுமந்திருந்த அவளது தந்தை அஸ்ரா அபூ ஹலீபுக்கு அருகே இருந்தபடி தெரிவித்தார்.
இதன்படி காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்திருப்பதோடு இவர்களில் 87 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கெரெம் ஷலோம் எல்லைக் கடவை ஊடாக தெற்கு காசாவுக்கு 1,200 மெட்ரிக் தொன் உணவு உதவிகளை ஏற்றிய 100 இற்கு அதிகமான லொறிகளை நேற்று (27) அனுப்பியதாக எகிப்து செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் காசாவின் மனிதாபிமான நிலையை மேம்படுத்தவெனக் கூறி இஸ்ரேல் வானில் இருந்து உதவிகளை வீசியது. வடக்கு காசாவில் இவ்வாறு வீசப்பட்ட உணவுப்பொதி ஒன்று நேராக கூடாரம் ஒன்றில் விழுந்து குறைந்தது 11 பேர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைகொண்டுள்ள பகுதிக்கு அருகே இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இடங்களிலேயே உதவிகள் வானில் இருந்து வீசப்பட்டுள்ளன. வானில் இருந்து விழுந்த உதவிகளை பெறுவதற்கு பலஸ்தீனர்கள் தமக்குள் சண்டையிடுவதை காணமுடிவதாக அங்குள்ள செய்தியாளர்கள் விபரித்துள்ளனர்.
சர்வதேச அளவில் தனது பிம்பத்தை மேம்படுத்துவதற்கான ஏமாற்று வேலையாக இது உள்ளது என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறம் இவ்வாறு வானில் இருந்து உதவிகளை வீசுவதை உதவி நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.
காசாவில் 2.2 மில்லியன் மக்கள் இடையே பட்டினி பாதிப்பு அதிகரித்திருப்பதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. இது சர்வதேச அளவில் அதிக அவதானத்தை பெற்றுள்ளது.
இதனையொட்டு எதிர்வரும் செப்டெம்பரில் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
காசாவுக்கான உதவி விநியோகம் குறித்த இஸ்ரேலின் புதிய அறிவிப்பு தொடர்பில் பலஸ்தீனர்கள் ஆறுதலை வெளியிட்டபோதும் நிரந்தரமாக போரை முடிவுக்கு கொண்டுவருவதை வலியுறுத்தினர்.
‘பெரும் அளவில் உணவு உதவிகள் காசாவுக்கு வருவது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றாகும்’ என்று தமர் அல் புரை என்பவர் குறிப்பிட்டார். ‘அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்திய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல்படியாக இது இருக்கும் என்று நாம் நம்புகிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் இந்த உதவிகளை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பிலும் சிலர் கவலை வெளியிட்டுள்ளனர். ‘உதவிகள் தரை வழியாகவே மக்களை வந்தடைய வேண்டும். வானில் இருந்து போடப்படும்போது அது மக்களுக்கு காயங்களையும் சேதங்களையும் ஏற்படுத்துகிறது’ என்று இடம்பெயர்ந்துள்ள காசா குடியிருப்பாளரான சுஹைல் முஹமது ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய உதவி விநியோகங்களின்போது இஸ்ரேலியப் படை நடத்தும் தாக்குதல்களில் தொடர்ந்து பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
நேற்று இவ்வாறு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் உட்பட நேற்றுக் காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 53 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா நகரில் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் பெண் ஒருவர் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டதாக அங்குள்ள அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காசாவில் கடந்த 21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment