காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் : உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, July 24, 2025

காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் : உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் அந்தப் பகுதிகளுக்கான உதவிகளை இஸ்ரேல் முற்றாக முடக்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தொடர்புபட்டு காசா மருத்துவமனைகளில் பத்து பலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் காசா போரில் இடம்பெற்ற பட்டினிச் சாவு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறைந்தது 80 சிறுவர்கள் உள்ளனர்.

காசாவில் மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாகவும் பட்டினி மற்றும் தாகம் போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காசாவில் உள்ள ஐ.நாவின் பலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் அத்னன் அபூ ஹஸ்னா குறிப்பிட்டுள்ளார். 

காசாவில் ஒரு மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

‘நானும் எனது குழந்தைகளும் ஒவ்வொரு நாள் இரவும் பட்டினியுடனேயே படுக்கைக்குச் செல்கிறோம்’ என்று காசாவின் சந்தை விற்பனையாளர் ஒருவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். 

‘காசாவில் உள்ள அனைவரும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்’ என்றும் அபூ அலா என்ற அந்த விற்பனையாளர் குறிப்பிட்டார்.

தெற்கு காசா நகரின் நாசர் வைத்தியசாலையைச் சேர்ந்த கனடா நாட்டு மருத்துவரான டைட்ரே நுனான், உணவுப் பற்றாக்குறை மருத்துவ பணியாளர்களையும் பாதித்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

‘தமது பணி நேரத்தில் எமது தாதியர்கள் நிற்பதற்குக் கூட பலமில்லாமல் உள்ளனர். மனித உயிர்வாழ்வுக்குத் தேவையான மிக அடிப்படையான தரநிலையைக் கூட இங்கு பூர்த்தி செய்ய முடியவில்லை’ என்று அவர் பி.பி.சி. இற்கு குறிப்பிட்டார்.

இதனிடையே காசாவில் பட்டினி நிலையை எச்சரித்தும் அதற்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தும் 100 இற்கு அதிகமான சர்வதேச தொண்டு அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு, சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு மற்றும் ஒக்ஸ்பேம் போன்ற நிறுவனங்களும் கையெழுத்திட்ட அமைப்புகளில் அடங்குகின்றன. 

காசாவில் உடன் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்து ஐ.நா தலைமையிலான உதவிகள் செல்வதற்கு அனைத்து எல்லைகளும் திறக்கப்பட வேண்டும் என்று இந்த கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காசாவில் ஐ.நா. தலைமையிலான உதவி விநியோகங்களுக்கு மாற்றாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவில் சர்ச்சைக்குரிய முறையில் உதவிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றபோதும் அங்கு நடத்தப்படும் தாக்குதல்களில் உதவிக்குக் காத்திருந்த பலஸ்தீனர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.

தெற்கு காசாவில் இருவேறு உதவி விநியோக நிலைகளில் இடம்பெற்ற இஸ்ரேலிய படைகளின்; தாக்குதல்களில் குறைந்தது 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 100 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என மருத்துவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பீ, செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் உதவி விநியோக நிலையம் ஒன்றுக்கு அருகே இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 534 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் இஸ்ரேலிய தாக்குதல்களால் இடிந்த கட்டடங்களில் மீட்கப்பட்ட 13 சடலங்களும் இருப்பதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் மீட்புப் பணியில் ஈடுபடுவதை இஸ்ரேலியப் படை தடுப்பதன் காரணமாக பலரும் இடிபாடுகளில் சிக்கி உதவிகள் கிடைக்காமல் உயிரிழப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment