(எம்.மனோசித்ரா)
இலங்கையின் ஊழல், மோசடிகளுக்கு ஜப்பான் இரையாகியுள்ளது. முதலீட்டு வாய்ப்புக்களை ஆராயும்போது இலங்கை முக்கிய இடத்தில் காணப்படுகின்ற போதிலும் நியாயமான நம்பிக்கை மிக்க வெளிப்படைத் தன்மையுடைய வர்த்தக சூழலை இங்கு அவதானிக்கக் கூடியதாக இல்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாடா தெரிவித்துள்ளார்.
எனவே முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கு அதற்கு பொறுத்தமான ஊழல் அற்ற வெளிப்படைத் தன்மையுடனான வர்த்தக சூழலை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜப்பான் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
பாத்பைன்டர் அமைப்பினால் திங்கட்கிழமை (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வட்டமேசை கலந்துரையாடலொன்றிலேயே ஜப்பான் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஊழல், மோசடிகளால் இலங்கை அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றது. இவ்வாறான நிலைமைகளை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்காக தற்போதைய அரசாங்கம் பொறுத்தமான வழிமுறைகளைப் பின்பற்றும் என்று நம்புகின்றோம்.
இலங்கையில் முதலீடுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளின்போது சில ஜப்பான் நிறுவனங்கள் வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தபோது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலஞ்சம் வழங்குதல், தரகுப்பணம் வழங்குதல் உள்ளிட்ட மோசடிகளுக்கு இடமளிக்கவில்லை.
இதற்கு முன்னர் ஜப்பான் நிறுவனங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராயும்போது இலங்கைக்கு மிக முக்கிய இடம் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் நியாயமான நம்பிக்கை மிக்க, வெளிப்படைத் தன்மையுடைய வர்த்தக சூழலை இலங்கையில் அவதானிக்கக் கூடியதாக இல்லை.
ஜப்பான் நிறுவனங்கள் பலவும் இவை தொடர்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஊழலை ஒழிக்கும் இலக்குடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றமை மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறான ஊழல் ஒழிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அத்தியாவசியமானது என்று நாம் நம்புகின்றோம்.
பல்வேறு வழிகளிலும் இலங்கையானது ஜப்பானுக்கு மிக முக்கியமான பங்காளியாகவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்துடன் இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இனிவரும் காலங்களில் ஜப்பானின் முதலீட்டு திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பது குறித்து ஆராயப்படும். எனவே அதற்கு பொறுத்தமான சூழலை இலங்கையில் உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment