பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலதிக உறுதிப்படுத்தலுக்காக ஜூன் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் என்பவரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (14) நீதியரசர்கள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தலில் அரச மருத்துவ அதிகாரியாக அர்ச்சுனா பதவி விலகாமல் தேர்தலில் போட்டியிட்டதாகவும், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 91(1)(e) பிரிவை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் என்பவரால் அர்சுனாவிற்கு எதிராக இந்த மனுதாக்கல் செய்யப்பட்டது.
முறையான விடுமுறை எடுக்காமல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் என்றும் அவரின் எம்.பி பதவி வறிதாக்கப்பட வேண்டுமெனவும் இந்த மனுவில் கோரப்பட்டது.
இதன்போது சாட்சியங்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த மனு எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment