இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், “இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சார்ந்து அமெரிக்க அரசு நிர்வாக ரீதியாக முக்கிய பங்காற்றியது. இரு தரப்புக்கும் வர்த்தக ரீதியான அழுத்தம் கொடுத்து போரை தவிர்க்கச் செய்தோம். இந்தப் போர் நிறுத்தம் நிரந்தரமானதாக இருக்கும் என கருதுகிறேன்.
சனிக்கிழமை அன்று இதை செய்தோம். இதன் மூலம் அணு ஆயுதங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே போரை தடுத்து நிறுத்தினோம். அது நடக்காமல் போயிருந்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.
இந்த மோசமான மோதலை அமெரிக்கா தவிர்க்க செய்துள்ளது. அதை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிக அளவில் வர்த்தகம் மேற்கொள்ள உள்ளோம். இது தொடர்பாக இந்தியாவுடன் பேசி வருகிறோம். விரைவில் பாகிஸ்தான் உடன் பேசி வருகிறோம்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தீவிரம் அடைந்ததால், அமெரிக்க அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றையதினம் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் முழுமையான, உடனடியான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளின் அறிவார்ந்த செயலையும், அபார புத்திசாலித்தனத்தையும் பாராட்டுகிறேன். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி’ என்று தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.
No comments:
Post a Comment