நாட்டில் 22 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் : பொதுமக்கள் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 25, 2025

நாட்டில் 22 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் : பொதுமக்கள் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ளவும்

(செ.சுபதர்ஷனி)

டெங்கு பரவலின் அதிகரிப்போடு 42 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 22,248 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இம்மாதத்தில் கடந்த சனிக்கிழமை (24) வரை சுமார் 4702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜனவரி மாதம் 4936 நோயாளர்களும், பெப்ரவரி மாதம் 3665 நோயாளர்களும், மார்ச் மாதம் 3770 நோயாளர்களும், ஏப்ரல் மாதம் 5175 டெங்கு நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

தொடரும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, கொழும்பு மாநகர சபை, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

டெங்கு பரவலை கருத்தில் கொண்டு 42 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 11 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 45.4 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் வைத்தியசாலையை நாடுவது நல்லது.

கர்ப்பிணித் தாய்மார், சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயற்படுவது அவசியம்.

நுளம்பு மற்றும் நுளம்பு குடம்பிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் கீழ் மே மாதம் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை 15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளை பிரதான கேந்திர நிலையமாக கொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment