ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடைச் சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (31) கிண்ணியாவில் இடம்பெற்ற பலஸ்தீன் ஆதரவு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ருஸ்தியின் கைதுக்கு பின்னால் பாரிய அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதாகவே நினைக்கிறேன். ஸ்டிக்கர் ஒட்டியதுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வு கவிதை எழுதிய முஸ்லிம் இளைஞன் கோட்டபாய அரசால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வையே நினைவு கூறுகிறது.
தற்போது இந்த கைதுக்கு பொலிசாரால் சொல்லப்பட்ட காரணத்தை பார்க்கும்போது அவர்கள் ருஸ்தியை குற்றவாளியாக்க காரணத்தை தற்போது தேடுவதாகவே உணர்கிறேன்.
பொலிஸாரின் கூற்றுப்படி அவர் அடிப்படைவாத கருத்துக்களை கொண்டிருப்பின் ஸ்டிக்கர் ஒட்டும்வரை அவர் ஒரு அடிப்படைவாதி என அவர்களுக்கு தெரியாது. இலங்கையில் ருஸ்தி மட்டும்தானா அடிப்படைவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு சமூகத்திலும் தாம் சார்ந்த சமூகத்தின் அடைப்படைவாத கருத்துக்களை கொண்ட பலர் உள்ளனர். அவ்வாறு எனில் அவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியுமா? அடிப்படைவாத கருத்துக்களை வெளிப்படையாக கூறும் பிக்குகளின் மீது இந்த சட்டம் பாயுமா?
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் ஓய்வுபெறும் இஸ்ரேலிய கொத்தனியாக இலங்கை மாறிவருவதை நாம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி உள்ளோம். அவர்களின் வணக்கஸ்தலங்கள் நிறுவப்படுவதையும் அவர்களின் ஆக்ரமிப்பு செயற்பாடுகளையும் கூறியுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் ஒன்றையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. அது ஏன் என்பது இந்த கைது மூலமாக தெளிவாகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ஸ்டிக்கர் ஒட்டியதுக்கே பயங்கரவாத தடைச் சட்டம் எனில் இந்த அரசு இஸ்ரேலின் பாதுகாவலனாகவே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம், இன மத பேதமற்ற அரசு என்ற கோஷங்களுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தற்போது அதே பயங்கரவாத தடைச் சட்டத்தையே ராஜபக்சக்களை விட மோசமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
இந்த இரட்டை வேடத்துக்கு விரைவில் மக்கள் பதில் வழங்குவார்கள். ருஸ்தியின் விடுதலைக்காக நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment