வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு 16 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதிவாதிகளுக்கு தலா ரூ. 2 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர்களுக்கு எதிராக 06 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2012 - 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக செயற்பட்ட போது அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய ஷாந்தி சந்திரசேன முறையற்ற விதத்தில் இலாபமீட்ட இடமளித்தமை, எரிபொருள் கொடுப்பனவு சம்பளத்துடன் வழங்கப்பட்ட நிலையிலும் எரிபொருள் கொள்வனவு வவுச்சரின் ஊடாக 26,000,00 ரூபாவிற்கும் அதிக தொகையை வழங்கியமை, அவ்வாறு வழங்குவதற்கு அரச அதிகாரிகளைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தமது தீர்ப்பை அறிவித்த நீதிபதி சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்கமைய இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய ஊழல் குற்றத்தை இழைத்தமைக்காக சந்தேகநபர்கள் இருவரையும் குற்றவாளிகளாக தீர்மானித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனையை அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் சகோதரரான எஸ்.எம். ரஞ்சித் மற்றும் எஸ்.எம். சந்திரசேனவின் மனைவி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment