ஏழு ஜனாதிபதி மாளிகைகள் பொருளாதார மையங்களாகின்றன - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 29, 2025

ஏழு ஜனாதிபதி மாளிகைகள் பொருளாதார மையங்களாகின்றன

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பங்களாக்கள் தொடர்பாக தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி, ஜனாதிபதி மாளிகைகளை வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் பத்துக்கும் மேற்பட்ட வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஜனாதிபதி மாளிகை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபயோகத்திற்கு பெற்றுக் கொள்வதற்காக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நுவரெலியாவில் காணப்படும் ஜனாதிபதி மாளிகையை சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளை மாத்திரம் விசேட உற்சவங்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டு அரச தலைவர்கள் நாட்டுக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் அவர்களை வரவேற்பதற்கும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கும் அந்த ஜனாதிபதி மாளிகைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், கண்டி பெரஹெர நிகழ்வுகளை சம்பிரதாயமாக நிறைவேற்றுவதற்காக கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக நிர்வாகத்தின் கீழ் கொழும்பு, கண்டி, நுவரெலியா, மஹியங்கனை, அநுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிப்பிட்டி மற்றும் பெந்தோட்டை பிரதேசங்களில் ஜனாதிபதி மாளிகைகள் காணப்படுவதாகவும் கொழும்பு மற்றும் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள் தவிர்ந்த ஏனைய ஜனாதிபதி மாளிகைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment