(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்னும் சில தினங்களில் 6 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் இதற்கு முன்னர் வாக்குறுதிகளுக்கு மேல் வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் தயாரித்துக் கொண்டிருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்னும் சில தினங்களில் 6 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் இதற்கு முன்னர் வாக்குறுதிகளுக்கு மேல் வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் பின்னர் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்தும் இது தொடர்பான வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கிறது.
6 ஆண்டு நிறைவுக்கு முன்னர் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் தற்போது பிரதான சூத்திரதாரியை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
சரியான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையான குற்றவாளிகளை இனங்காண்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. அதனால்தான் பிரதான சூத்திரதாரியைக் கைது செய்வதை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
பிள்ளையான் என்பவர் யுத்தத்தை நிறைவு செய்வதற்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கிய ஒருவராவார்.
கடந்த காலங்களில் அவர் தவறிழைத்திருந்தாலும் அவற்றுக்கு மன்னிப்பு வழங்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. யுத்தத்தை நிறைவு செய்வதற்கு ஒத்துழைத்தவர்கள் அதற்கு முன்னர் தவறிழைத்திருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளன.
அந்த வகையில் யுத்தத்தை நிறைவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான் தேசப்பற்றாளராவார்.
அவ்வாறான நபர் 2006 யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டிருக்கின்றார். மறுபுறம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அவரை பிரதான சூத்திரதாரியாக தயாரிப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தாமல் பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜனாதிபதியின் தேவைக்கேற்பவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நபர்களை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துகின்றது.
பிள்ளையான் என்ற சந்தேகநபருக்காக உதய கம்மன்பில மாத்திரமின்றி சட்டத்தரணிகள் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவாலும் என்னாலும் கூட முன்னிலையாக முடியும்.
ஆனால் உதய கம்மன்பில முன்னிலையான வழக்கொன்று தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வியெழுப்புகின்றார். வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ எனக் கூறிக் கொள்ளும் அவர் எந்தவொரு வைத்தியசாலையிலும் சேவையாற்றி நாம் பார்த்ததில்லை. ஆனால் அது தொடர்பில் நாம் கேள்வியெழுப்பவுமில்லை.
சட்டத்தரணிகள் என்பவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு விசாரணைகளை மாத்திரம் மேற்கொள்பவர்கள் அல்ல. எனவே இவை தொடர்பில் அறியாமல் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தோல்வியை முன்கூட்டியே அறிந்து கொண்டு அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரசாங்கம் செல்லும் பாதை தவறானது என்பதற்கான சிவப்பு எச்சரிக்கையாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அமையவிருக்கிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் பட்டியல் வெளியிட்ட அரசாங்கத்துக்கு பரிசோதனைகள் இன்றி வெளியேற்றப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் பட்டியலிட முடியாமல் போயுள்ளது.
சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் எமது அரசாங்கத்தால் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இந்த அரசாங்கம் அதனை விடுத்து எரிபொருள் மின் உற்பத்தி திட்டங்களைக் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
மறுபுறம் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் பாதாள உலகக் குழுக்கள் தலை தூக்கியுள்ளன. அது மாத்திரமின்றி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களும் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றன.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் கடுமையாக தயாராக வேண்டிய அவசியமில்லை. காரணம் அரசாங்கத்தைப் பற்றி மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment