பண்டிகை காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் மேற்படி 412 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் பெரும்பாலானவை வீடுகளில் இடம்பெற்றவை எனவும், அவ்வாறு 110 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வீதி விபத்துகள் காரணமாக 94 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்தார்.
இதில் சுமார் 80 பேருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக குறிப்பிட்டார்.
ஆயினும் இவ்வருடம் பட்டாசு விபத்துகள் காரணமாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஏப்ரல் 13, 14 ஆகிய 2 நாட்களிலும் 2 பேர் மாத்திரமே இது தொடர்பில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் இருவருக்கு பாரிய ஆபத்துகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இது ஒரு சிறந்த சூழ்நிலை எனவும் மேலும் கவனமாக இருந்தால், இவ்வாறான விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பதை இந்நிலைமை எடுத்துக காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகள் காரணமாக, 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 30 பேர் வாகன விபத்துகள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் காரணமாக ஏனையோர் இவ்வாறு வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment