கைது செய்யப்பட்டு, 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுடன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தமையை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர், குற்றப் புலனாய்வு அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, குறித்த கைதியுடன் பேச அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தடுப்புக் காவலில் உள்ள ஒரு சந்தேகநபருடன் தொலைபேசியில் கலந்துரையாடுவது சட்டவிரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
ஆயினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபரின் சட்டத்தரணியாக செயற்படும் உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடல் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றதாக அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் 09 திகதி சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவை குற்றப் புலனாய்வு திணைக்களம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment