தபால்மூல வாக்களிப்புக்கு அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டைகளை மீண்டும் அச்சிடுவதால் செலவுகள் அதிகமாகும். 20 ஆம் திகதிக்குள் தபால்மூல வாக்களிப்புக்கான சகல வாக்காளர் அட்டைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்று அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்தார்.
அரச அச்சகத் திணைக்களத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விடுமுறை ஆரம்பமாகும்போது 249 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிட்டிருந்தோம். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக வாக்காளர் அட்டைகளை மீண்டும் அச்சிட வேண்டியுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் தபால்மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகளையும் தேர்தல்கள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கவுள்ளோம். தபால்மூல வாக்களிப்புக்கு அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டைகளை மீண்டும் அச்சிடுவதால் செலவுகள் அதிகமாகும்.
100 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகளை மீண்டும் அச்சிட நேரிடும். இதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களேனும் தேவைப்படும். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்வோம் என்றார்.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை 71 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் தேர்தல் நடைபெறும் உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் எண்ணிக்கை இதுவரையில் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பல நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் நடைபெறும் உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கொழும்பு மாநகர சபை உட்பட 16 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் பணிகளை இடைநிறுத்துமாறு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் இரத்துச் செய்தது.
இவ்வாறான நிலையில் மேலும் 10 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பாக உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.
No comments:
Post a Comment