ரோயல் பார்க் குற்றவாளிக்கு மன்னிப்பு : ரூபா 1 மில்லியன் இழப்பீடு செலுத்திய முன்னாள் ஜனாதிபதி : உயர் நீதிமன்றத்தில் அறிவித்ததையடுத்து மைத்திரி விடுதலை - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 29, 2025

ரோயல் பார்க் குற்றவாளிக்கு மன்னிப்பு : ரூபா 1 மில்லியன் இழப்பீடு செலுத்திய முன்னாள் ஜனாதிபதி : உயர் நீதிமன்றத்தில் அறிவித்ததையடுத்து மைத்திரி விடுதலை

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய சம்பவம் தொடர்பில், உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட ரூ. 1 மில்லியன் இழப்பீட்டுத் தொகையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளார்.

இந்த வழக்கு இன்று (29) மு.ப. 10.00 மணியளவில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த இழப்பீட்டை செலுத்த தவறியதற்கான காரணத்தை நீதிமன்றம் இதன்போது வினவியிருந்தது. இதன்போது அவர் சார்பில் நீதிமன்றில் எவரும் முன்னிலையாகியிருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்றம் அறிவுறுத்தியபடி இழப்பீட்டுத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த உறுதிப்படுத்தலைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை விடுவிக்க நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

இதன்போது நீதிமன்றில் மைத்திரிபால சிறிசேன ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் அடுக்குமாடிய குடியிருப்பில் யுவோன் ஜோன்சன் (Yvonne Jonsson) எனும் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த அந்தனி ஜயமஹவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை தொடர்பான முடிவு அரசியலமைப்பை மீறுவதாக அறவித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிக்கு உரிய தண்டனையை செயற்படுத்த உத்தரவிட்டது.

இது தொடர்பில் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்திற்கு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்திருந்தது

குற்றவாளிக்கு முதலில் 2012 ஆம் ஆண்டு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அவர் கொலைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் கொலை சம்பவத்தில் அவருக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆயினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 இல் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியிருந்தார்.

இவ்வழக்கில் சந்தேகநபரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment