ஶ்ரீ தலதா வழிபாடு இன்று முதல் ஆரம்பம் : 16 வருடங்களின் பின் நிகழ்வு : ஜனாதிபதியும் பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 17, 2025

ஶ்ரீ தலதா வழிபாடு இன்று முதல் ஆரம்பம் : 16 வருடங்களின் பின் நிகழ்வு : ஜனாதிபதியும் பங்கேற்பு

ஶ்ரீ தலதா வழிபாடு இன்று (18) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, இன்று (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்துகொள்ள உள்ளார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெறும் இந்நிகழ்வில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் கலந்துகொள்ள எதிர்பார்ப்பதோடு, அவர்கள் கொழும்பிலிருந்து விசேட புகையிரதம் மூலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனத்துடனும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டலின் கீழும், ஏற்பாடு செய்யப்பட்ட “ஶ்ரீ தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

ஆரம்ப நாளான இன்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு தலதா மாளிகையிலுள்ள புத்தரின் புனித தந்தத்தை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்விற்காக இராணுவத்தினர் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகின்றனர். புனித தந்தத்தை வணங்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தை சுத்தம் செய்தல், பக்தர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங்குதல், பக்தர்களை விகாரை வளாகத்திற்கு முறையாக வழிநடத்த தேவையான அணுகும் வீதிகளை அமைத்தல் ஆகியன அவர்களது பணிகளில் மிக முக்கியமானவையாகும்.

நேற்றுமுன்தினம் (16) ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்குள் சுகாதார நடவடிக்கைகளுக்காகத் தேவையான சுமார் 135 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் 5 கொள்கலன்கள், கூடாரங்கள் மற்றும் விசேட தேவை கொண்ட பக்தர்களுக்கான படிக்கட்டுகளுடன் கூடிய வீதிகள் ஏற்கனவே இராணுவத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முடிக்கப்பட்டுள்ளன. முன்னெடுக்கப்படும் தான நடவடிக்கைகளுக்குத் தேவையான சுமார் 100 மேசைகளும் ஏற்கனவே அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment