(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டின் பாதுகாப்புக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் திணைக்களத்தின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்துகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. தமிழ் மொழி மூலமான உறுப்பினர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறதென தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு, செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாடு என்ற வகையில் முன்னுக்கு செல்ல பொருளாதார ஸ்திரத்ன்மை அத்தியாவசியமாகும். அதேபோன்று சுற்றுச்சூழல் தொடர்பான உணர்வு இருக்க வேண்டும். அதேபோன்று நாட்டின் நல்லாட்சி முக்கியமாகும். இந்த விடயங்களை முன்கொண்டு செல்ல பொலிஸாரின் அர்ப்பணிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும்.
பொலிஸ் திணைக்களம் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் திணைக்களமாகும். அதனால் இந்த திணைக்களத்தின் தேவைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாட்டில் இனவாதம் தலைதூக்க பிரதான காரணமாக அமைவது அரச துறைக்கு சென்று தங்களின் தாய்மொழில் பிரச்சினையை தெரிவித்து அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்போதாகும். குறிப்பாக வட மாகாண உறுப்பினர்கள் இது தொடர்பில் அவர்களின் கவலையை இந்த சபையில் தெரிவித்திருந்தனர்.
அதனால் பொலிஸ் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் வெற்றிடங்களை நிரப்பும்போது தமிழ் மொழி மூலமான உறுப்பினர்களை இணைத்து வட மாகாண மக்களின் கவலையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
அதேபோன்று நாட்டில் போதைப் பாெருள் கடத்தல்காரர்களை அடக்குவதற்கு பொலிஸாரின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். அதற்காக பொலிஸாருக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்துகொடுக்க எதிர்பார்க்கிறோம்.
குறிப்பாக பொலிஸாருக்கு தொழிநுட்ப பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதேபோன்று மொழி பயிற்சி தொடர்பில் தமிழ் மொழி பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்திய அரசாங்கத்தின் உதவியால் வடக்கில் 80 பொலிஸ் நிலையங்குக்கு ‘கெப்’ ரக வாகனம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment