(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும். அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவற்றை நீக்குவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, மக்களின் ஆதரவுடன்தான் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் அரசாங்கத்துக்கு விசேட ஆணை வழங்கியுள்ளார்கள். ஆகவே அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்தே செயற்படுகிறோம். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அனைத்து சிறப்புரிமைகளையும் நீக்கிக்கொண்டு இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.
பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் முப்படைகள் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் காணப்படுகின்றன. ஆகவே இராணுவத்துக்கு மாத்திரம் அதிக நிதி ஒதுக்கப்படவில்லை.
தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், மக்களின் பொதுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலும் இராணுவத்தையே அழைக்கிறோம். ஆகவே முப்படையின் சேவையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம் மற்றும் இராணுவம் வசமுள்ள காணிகள் குறித்து அப்பிரதேசங்களின் பிரதிநிதிகள் பல விடயங்களை முன்வைத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனை குழுவிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவம் வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும். அத்துடன் அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவற்றை முறையான திட்டங்களுடன் அகற்றுவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு மாகாணத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பலாலி மற்றும் அச்சுவேலி வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பலாலி விமான நிலைய அபிவிருத்தியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment