அதிகாரத்தை பெற்றுக் கொள்ள குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்க வைத்துக் கொள்ள முடியாது : அரச சொத்து முறைகேடு, அரச சேவை வினைத்திறனாக்கம் பற்றி பேசுவது கர்மவினை என்றே குறிப்பிட வேண்டும் - முன்னாள் சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 2, 2025

அதிகாரத்தை பெற்றுக் கொள்ள குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்க வைத்துக் கொள்ள முடியாது : அரச சொத்து முறைகேடு, அரச சேவை வினைத்திறனாக்கம் பற்றி பேசுவது கர்மவினை என்றே குறிப்பிட வேண்டும் - முன்னாள் சபாநாயகர்

(இராஜதுரை ஹஷான்)

அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது எனது நம்பிக்கையாகும். பல கோடி பெறுமதியான அரச சொத்துக்களை அழித்து, அரச சேவையை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டவர்கள் அரச சொத்து முறைகேடு மற்றும் அரச சேவை வினைத்திறனாக்கம் பற்றி பேசுவது கர்மவினை என்றே குறிப்பிட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பதவி காலத்தின் இறுதிப் பகுதியில் ஒன்பது மாதங்களுக்கு 334 இலட்சம் ரூபாய்க்கு எரிபொருள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இந்த வாகனம் தொடர்பான பதிவுகள் பாராளுமன்றத்தில் உள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து கணக்காய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2025.02.27 ஆம் திகதியன்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க முன்னாள் சபாநாயகர் பயன்படுத்திய வாகனங்கள் குறித்து வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உண்மையை குறிப்பிட விரும்புகிறேன்.

1983 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு முதன்முறையாக தெரிவு செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டேன். இக்காலப்பகுதியில் எவ்விதமான அரச உத்தியோகபூர்வ இல்லங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு மற்றும் பதவிக்கான பணிகளின் நிமித்தம் அரச உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக் கொண்டேன்.

சபாநாயகருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்த காலத்தில் உணவுக்கான கட்டணத்தை எனது தனிப்பட்ட கணக்கில் இருந்து செலுத்தினேன் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

சபாநாயகர் பதவி வகிப்பவருக்கு மூன்று அரச வாகனங்கள் ஒதுக்கப்படும். இதற்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாகனம் ஒன்றும் பாதுகாப்பு நிமித்தம் வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக எனது பிரதான ஐந்து பணியாட்களுக்காக ஐந்து வாகனங்களும் அதற்காக எரிபொருளும் வழங்கப்பட்டன.

எனக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு 334 இலட்சம் ரூபாய்க்கு எரிபொருள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இந்த வாகனம் தொடர்பான பதிவுகள் பாராளுமன்றத்தில் உள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து கணக்காய்வு செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.

பதவி காலத்தில் நான் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் ஊடகங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக தகவல்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது எனது நம்பிக்கையாகும். பல கோடி பெறுமதியான அரச சொத்துக்களை அழித்து, அரச சேவையை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டவர்கள் அரச சொத்து முறைகேடு மற்றும் அரச சேவை வினைத்திறனாக்கம் பற்றி பேசுவது கர்மவினை என்றே குறிப்பிட வேண்டும்.

நவநாகரீகமான முறையில் ஆடையணிந்தால் மாத்திரம் ஒருவர் முழுமையடைய முடியாது. நடத்தை மற்றும் செயற்பாடுகள் ஊடாகவே மனிதம் முழுமையடைவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறேன். வழங்கும் போதனைகள் அனைவருக்கும் பொதுவானதாகவும், ஏற்புடையதாக அமைய வேண்டும்.

பொய்யுரைத்தல் மற்றும் பிறர் மீது வெறுப்பினை தூண்டிவிடுதல் பௌத்த மத அறகோட்பாடுகளுக்கு எதிரானது. நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் வெகுவிரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

No comments:

Post a Comment