(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கடந்த காலங்களில் இடம்பெற்ற இன ரீதியிலான முரண்பாடுகளுக்கு பிரதான காரணம் தேசிய ஐக்கியம் வீழ்ச்சியடைந்தமையாகும். நாட்டில் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதாக இருந்தால் மொழி உரிமைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் ஒரிரு தினங்களில் ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக நீண்ட காலமாக நாட்டில் பின்பற்றி வந்த பிழையான நடவடிக்கைகள் நிலவிவந்த இனவாத, மதவாத ரீதியிலான சச்சரவுகளும் இதற்கு காரணமாக அமைந்தன.
இவ்வாறு சமூகம் குழுக்களாக பிரிந்து தேசிய ஐக்கியம் இல்லாமல்போன அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன. சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது, பொருளதாரம் வீழ்ச்சியடைந்தது.
அதேபோன்று சமூக நிலைமை மற்றும் கலாசாரம் வீழ்ச்சியடைந்து. அந்த நிலைமை காரணமாக இந்த நாட்டில் தேசிய ஐக்கியம் வீழ்ச்சியடைந்தது. தேசிய ஐக்கியம் என்பது நாட்டில் மிகவும் அத்தியாவசியமான தொன்றாகும்.
நாட்டில் கடந்த காலங்களில் அதிகாரத்துக்கு வருவதற்கு இலகுவான வழியாக தெரிவு செய்துகொண்டது இனவாதத்தை தூண்டுவதாகும். ஆனால் இந்த நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் இனவாதத்துக்கு விருப்பம் இல்லை என்பதை கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் நிரூபித்துள்ளனர்.
சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டின் அனைத்து பிரதேசங்களின் மக்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொள்ள முடியுமாகி இருக்கிறது. இதன் மூலம் மக்கள், எங்களுக்கு சமாதானம் ஐக்கியம் தேவை என்பதையே தெரிவித்திருக்கிறது.
ஆனால் கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ் அதிகாரத்தை பெற்றுக் கொண்ட பின்னர் ஆரம்பமாக செய்தது ஐக்கியம் என்ற விடயத்தை புறந்தள்ளிவிட்டதாகும். அவர் அதிகாரத்துக்கு வந்து தெரிவித்த முதலாவது உரையின் மூலம் அனைத்து மக்களும் அதனை தெரிந்துகொண்டனர்.
ஆனால் அந்த அரசாங்கத்திலும் அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு என நிறுவனம் ஒன்றை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் வைராக்கியத்தை பிரசாரம் செய்பவர்களுக்கு அரச மற்றும் தனியார் ஊடகங்களில் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த நிலையில் தேசிய ஐக்கியம் தொடர்பான நிறுவனம் ஒன்றை முன்னெடுத்துச் சென்றமை கேளிக்கூத்தாகும்.
மேலும் எமது நாட்டில் கடந்த காலங்களில் ஐக்கியம் மற்றும் இனங்களுக்கிடையில் அன்னியோன்னியம் வீழ்ச்சியடைவதற்கு பிரதான காரணமாக அமைந்திருப்பது அரசியலாகும் என மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி விதப்புரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் இரண்டாவது விடயம் மொழி பிரச்சினையாகும். நாட்டு பிரஜை ஒருவர் தனக்கு ஏற்படுகின்ற அநீதி ஒன்று தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் தனது மொழியில் தெரிவிக்க முடியாவிட்டால் அவருக்கு ஏற்படுக்கின்ற மனநிலை தொடர்பில் எங்களுக்கு உண்ர்ந்துகொள்ள முடியும்.
அதனால் எமது சமூகத்தில் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதாக இருந்தால் அதற்கு மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதனால்தான் எமது அரசாங்கம் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு கீழ் மொழி தொடர்பான திணைக்களத்தையும் கொண்டுவந்திருக்கிறோம்.
அத்துடன் அரசாங்கம் மொழி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக தமிழ் மொழி தெரிந்த பொலிஸ் அதிகாரிகளை புதிதாக இணைத்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறது.
அதேநேரம் நாங்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் சிலர் சமூகத்துக்கு மத்தியில் குராேதத்தை விதைத்து இனவாத்தை தூண்டுவதற்கு முயற்சித்து வருகின்றனர். ஆனால் பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாக நாங்கள் அவர்களை ஊடகங்கள் ஊடாக பிரபல்லியப்படுத்த முயற்சிக்கப்போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment