அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
34 வயதுடைய கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்த, சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்றும் குறித்த சந்தேகநபர் நேற்றுமுன்தினம் (10) பிறிதொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து விடுதலை பெற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பின்னர் அவரது இரண்டு கையடக்க தொலைபேசிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார், மேலும் காணாமல் போன தொலைபேசியின் இருப்பிடம் குறித்து கிடைத்த சமிக்ஞைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, அவுகன ரயில் நிலையம் அருகே கையடக்க தொலைபேசி சமிக்ஞைகள் இல்லாததால், அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
கல்னேவ பொலிஸ் விசேட குழுவினர் கல்னேவ, எலபதுகம பகுதியில் மறைந்திருந்து சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணராகப் பயிற்சி பெற்று வரும் 32 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர், நேற்றுமுன்தினம் (10) இரவு வழக்கம்போல் பணிக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தார்.
குறித்த வைத்தியர், தனது கடமையை முடித்துவிட்டு, இரவு 7.00 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்திய நிபுணர்கள் மட்டுமே வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார்.
வைத்தியர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தபோது, பின்னால் இருந்து வந்த ஒரு நபர் திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், வைத்தியரின் வாயை இறுக்கமாகக் கட்டி, அவர் கத்த முடியாதபடி கட்டிய சந்தேகநபர், உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவைத் திறக்கச் சொல்லி, வைத்தியரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, சத்தம் யாருக்கும் கேட்காதபடி கதவை மூடியுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளைக் கட்டி, கண்களைக் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் சந்தேகநபர் தப்பி ஓடிய நிலையில், வைத்தியரின் கைப்பேசியையும் திருடிச் சென்றுள்ளார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், வைத்தியசாலை வார்டுக்கு வந்த வைத்தியர், தான் முகங்கொடுத்த சம்பவத்தைப் பற்றி அவரது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment