(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவம் இல்லாதவர்களே தற்போது தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் அங்கம் வகிக்கிறார்கள். புலனாய்வு பிரிவின் தகவல்களை முறையாக செயற்படுத்த வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்று சர்வஜன அதிகார கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கம் அனுபவம் இல்லாத புதிய அரசாங்கமாகும். ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு பிரதி அமைச்சர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபையில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் முதற்தடவையாக பாதுகாப்பு சபையில் அமர்ந்துள்ளனர். இவர்கள்தான் பாதுகாப்பு சபையில் இருக்கின்றார்கள் என்றால் அது பெரும் பிரச்சினைக்குரிய விடயமாகும். ஒருபோதும் இவ்வாறு நடந்ததில்லை.
எவ்வாறாயினும் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் குறைந்தது பிரதமராக பதவி வகித்துள்ளனர். . பாதுகாப்பு செயலாளராக இருந்துள்ளனர். அத்துடன் அதற்கு சமாந்திரமாக இராணுவத் தளபதிகளாக நீண்ட காலம் இருந்த சிரேஷ்ட பதவி வகித்தவர்கள் இருந்துள்ளனர். ஆனால் இம்முறை எவரும் இல்லை. இது புதியவர்களை கொண்ட பாதுகாப்பு சபையாகவே உள்ளது.
இதேவேளை பாதுகாப்பு படைகளின் பிரதானி என்று பதவியும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் வாராந்தம் கூடும் பாதுகாப்பு சபையில் சிரேஷ் உறுப்பினர் எவரும் இல்லை. நாட்டின் தலை தேசிய பாதுகாப்பு என்றால் அதற்கு தகவல்களை கொண்டுவரும் கட்டமைப்பே புலனாய்வுத் தகவல்கள்.
ஆனால் வாராந்த புலனாய்வு ஆய்வு கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், குற்றப் புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டாலும் அவர்கள் முதல் தடவையாக அமர்கின்றனர். இவர்கள் அனுபவம் உள்ளவர்கள் அல்ல.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த முறை தொடர்பில் புரிந்து கொள்ள வேண்டும். புலனாய்வு தகவல்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்துகொள்ளுங்கள். இல்லை என்றால் நாடு பாரிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment