மக்கள் நலன் கூட்டு என்றால் பங்காளிப்பேன் - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 1, 2025

மக்கள் நலன் கூட்டு என்றால் பங்காளிப்பேன் - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்பு விடுத்தால் எனது பங்களிப்பு நிச்சயமிருக்கும் என தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை தலைமை தாங்கிய இயக்கங்களின் ஒன்றிணைவு தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இன்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களின் நலன் சார்ந்து எனது அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன் என்பது யாவரும் அறிந்த விடயம்.

தமிழ் மக்களின் அரசியல் அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதே எனது அரசியல் அவா.

துரதிஷ்டவசமாக பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பு உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் மக்களுக்கான தீர்வினை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் ஓரணியில் எதிர்கொள்வதா அல்லது தேர்தலின் பின்னர் ஓரணியில் செயல்படுவதா என்ற விவாதம் இடம்பெற்று வருகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் எதிர்கொள்வது தொடர்பில் என்னுடன் சிலர் பேசினார்கள் அது நட்பு ரீதியாக இடம்பெற்றதே தவிர உத்தியோபூர்வமாக பேசுவதற்கோ கலந்துரையாடுவதற்கோ எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பொருத்த வரையில் ஒற்றுமை என்கின்ற விடயம் தமிழ் மக்களின் நலன் சார்ந்து கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை அல்லது ஒன்றிணைவு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொங்கு சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவை வழங்கியது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் யாழ் மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கி இமானுவேல் ஆனல்ட முதல்வர் ஆனார்.

அதேபோன்று யாழ் மாநகர சபையில் விஸ்வலிங்கம் மணிவண்ணுக்கு ஆதரவு வழங்கி அவரை முதல்வராக தெரிவு செய்வதற்கு உதவினோம்.

அதுமட்டுமல்லாது வேறு பிரதேச சபைகளிலும் மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்படும்போது பாதீட்டை தோற்கடிக்காமல் வெற்றி பெறுவதற்கு எமது கட்சி பங்களிப்பை வழங்கியுள்ளது.

தற்போது எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றது

ஆகவே தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மக்கள் நலனுக்கான ஒன்றிணைவு அவசியம் என கருதும் பட்சத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment