(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சபாநாயகரை சபை முதல்வர் இயக்குகிறார். உங்களை சபாநாயகர் என்று அழைப்பதா? அல்லது சபை முதல்வர் என்று அழைப்பதா? என்று சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நோக்கி வினவிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, கடந்த பாராளுமன்றத்தின் சபாநாயகர் பொம்மை போல் செயற்பட்டார். அவ்வாறு நீங்கள் செயற்படாதீர்கள். பதவிக்கான அதிகாரத்தையும், கௌரவத்தையும் சபை முதல்வருக்கு விட்டுக் கொடுக்காதீர்கள் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற அமர்வின்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக தோற்றம் பெற்றுள்ள வரிசை தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலதிக கேள்விகளை முன்வைக்க அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க மறுத்தார் மேலதிக கேள்விகளுக்கு இடமளிக்க முடியாது என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மேலதிக கேள்விக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை விழித்து, நிலையியல் கட்டளையிள் 91 பிரிவு மற்றும் 92 (அ) உப பந்தி ஆகியவற்றை குறிப்பிட விரும்புகிறேன். சபாநாயகர் முதல் நிலையியற் கட்டளையின் விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
தேசிய பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி வேளையின்போது மேலதிக கேள்விகளை கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. பாராளுமன்ற நிலையியல் கட்டளை ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் என்று பிரித்து தயாரிக்கப்படவில்லை.
பாராளுமன்றத்தின் தலைவர் சபாநாயகர். ஆனால் இன்று சபை முதல்வர் சபாநாயகரை இயக்குகிறார். சபை முதல்வர் சைகைக்கு அமையவே நீங்கள் (சபாநாயகர்) செயற்படுகின்றீர்கள். ஆகவே உங்களை ( சபாநாயகரை நோக்கி) சபாநாயகர் என்று அழைப்பதா? அல்லது சபை முதல்வர் என்று அழைப்பதா?
கடந்த அரசாங்கத்தில் சபாநாயகர் கைபொம்மை போல் செயற்பட்டார். விளைவு என்னவாயிற்று என்பதை அறிவீர்கள். ஆகவே சபாநாயகர் பதவிக்கான அதிகாரம் மற்றும் கௌரவத்தை சபை முதல்வருக்கு விட்டுக் கொடுக்காதீர்கள், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளியுங்கள் என்று சபாநாயகரை நோக்கி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment