(எம்.மனோசித்ரா)
பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, 3ஆவது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் 4ஆவது தவணையை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்துள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் இரண்டு வருடங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டிருப்பது நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின் வினைத்திறனுக்கான சான்றாகும்.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கான தூண்களாகச் செயல்பட்டு, உறுதியான பொருளாதார அடித்தளத்துடன் நாட்டை நாங்கள் ஒப்படைத்தோம்.
தற்போதைய நிர்வாகம் ஏற்கனவே முடிவுகளை வழங்கிய கடின உழைப்பைத் தொடர்வது மற்றும் நாங்கள் செயல்படுத்திய உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளை மாற்றுவதைத் தடுப்பது முக்கியம்.
ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் எதிர்கால சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும் இதேபோக்கில் இருப்பது அவசியம். இந்த மைல்கல்லை அடைவதற்கு அயராது உழைத்த குழுவை வழிநடத்தி, இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து வெளியே கொண்டுவரும் அதேவேளையில், வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதார எதிர்காலத்தை உறுதி செய்ததில் நான் பெருமைப்படுகிறேன்.
இந்த மீட்புப் பயணத்தை வெற்றியடையச் செய்த அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment