தகாத வார்த்தைகளால் திட்டிய முன்னாள் இராணுவ மேஜர் கைது : நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 18, 2025

தகாத வார்த்தைகளால் திட்டிய முன்னாள் இராணுவ மேஜர் கைது : நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சம்பவம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவமனை ஊழியர்களிடம் அமைதியற்ற முறையில் நடந்து, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் இன்று (18) கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய மேஜர் விடுமுறைக்காக நுவரெலியா பகுதிக்கு வந்து, மது அருந்திய நிலையில் வீழ்ந்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த முன்னாள் மேஜர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த வேளையில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாக தெரிவித்து, தனது மேலாடையை கழற்றிய வீசி விட்டு, அங்கிருந்த ஊழியர்கள் பலருக்கும் திட்டித் தீர்த்துள்ளார்.

இதனைக் கேட்க வந்த மருத்துவமனை பணிப்பாளரையும் தகாத வார்த்தைகளால் அவர் திட்டியுள்ளார்.

பின்னர், சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் பணிப்பாளர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், நுவரெலியா பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து குறித்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மஹேந்திர செனவிரத்னவிடம் கேட்டபோது, மேஜர் என்று கூறிக்கொண்ட நபர், குடித்து விட்டு வீழ்ந்து காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தபோது, கனிஷ்ட ஊழியர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்றபோது குறித்த நபர் தன்னையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மேஜர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment