அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற கவனம் செலுத்த வேண்டும் : சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற கவனம் செலுத்த வேண்டும் : சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத் தலைவர்

(நா.தனுஜா)

இலங்கை வரி விலக்குகள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத் தலைவர் பீற்றர் ப்ரூயர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது.

அதனையடுத்து வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத் தலைமையகத்தில் இலங்கை நேரப்படி திங்கட்கிழமை மு.ப 8.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத் தலைவர் பீற்றர் ப்ரூயர், பிரதித் தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்த்தா டெஸ்ஃபாயே வோல்ட்மைக்கல் ஆகியோர் கலந்துகொண்டு, இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

அதன்படி கடந்த கால பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை குறிப்பிட்டுக் கூறத்தக்களவு மீட்சியடைந்திருக்கும் நிலையில், தற்போது வரி வருமானத்தை அதிகரிப்பதிலும், இலக்கிடப்பட்ட சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை மேம்படுத்துவதிலும், பொது நிதியைத் திறம்பட முகாமை செய்யக்கூடிய வகையில் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பீற்றர் ப்ரூயர் வலியுறுத்தினார்.

அதேவேளை மின் கட்டணத்தைப் பொறுத்தமட்டில் செலவினத்தை ஈடுசெய்யக் கூடியவாறான கட்டண நிர்ணய முறைமையைப் பின்பற்றுவது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டணக் குறைப்பின்போது இம்முறைமை பின்பற்றப்படவில்லை எனக் கரிசனை வெளியிட்டார்.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின் கட்டணத்தை நிர்ணயிக்கும்போது, அது செலவினத்தை ஈடுசெய்யக்கூடிய விதத்தில் அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதாகவும், இது குறித்து தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் பீற்றர் ப்ரூயர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment