மக்களின் பேச்சு, கருத்து சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்போம் : வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும் என்றார் அமைச்சர் ஆனந்த விஜேபால - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

மக்களின் பேச்சு, கருத்து சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்போம் : வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும் என்றார் அமைச்சர் ஆனந்த விஜேபால

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். இச்சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அமர்வின்போது 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டு மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தேர்தல் காலத்தில் மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைவாகவே செயற்படுவோம். நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும்.

2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக ஊடகங்கள் மற்றும் சிவில் தரப்பினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அமைச்சரவை நிரூபம் கடந்த மாதம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெகுஜன ஊடகத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுக்களை ஒன்றிணைத்து உப குழு ஒன்றை அமைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இறுதி வரைவினை இந்த மூன்று அமைச்சுக்களும் ஒன்றிணைந்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. வழக்குத் தாக்கல் செய்யப்படவுமில்லை. பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை நாங்கள் முழுமையாக பாதுகாப்போம் என்றார்.

No comments:

Post a Comment