நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதியை வழங்கி விட்டு எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்ட வேண்டாம் : தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதியை வழங்கி விட்டு எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்ட வேண்டாம் : தயாசிறி ஜயசேகர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சுகாதார சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு, மேலதிக கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இது முறையற்றது. அனைத்து நெருக்கடிகளுக்கும் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகுகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரச சேவையாளர்களை வீதிக்கு இறக்கவில்லை. அரசாங்கமே அவர்களை வீதிக்கிறக்கியது. ஆகவே தற்போது எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது பயனற்றது. நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதியை வழங்கி விட்டு எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்ட வேண்டாம்.

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது, எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் குற்றஞ்சாட்டியது.

அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்தது. ஆகவே தற்போது பிரச்சினையில்iலை என்று எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே அனைத்தையும் எதிர்க்கட்சிகள் மீது சுமத்த வேண்டாம். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாகவே தீர்வு காணுமாறு நாங்கள் வலியுறுத்தினோம்.

அரசாங்கத்தையும், நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய தேவை எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகுகிறது.

அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றி அரசாங்கம் புகழ்பாடுகிறது. ஆனால் அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்புக்கு தீர்மானித்துள்ளார்கள். சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேலதிக கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். 30 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட மேலதிக கொடுப்பனவு 20 ஆயிரமாகவும், 20 ஆயிரமாக காணப்பட்ட மேலதிக கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் உட்பட இதர சுகாதார சேவையாளர்கள் 24 மணித்தியாயமும் சேவையாற்றுகிறார்கள். அவர்கள் தமது சேவைக்காலத்தை வரையறுத்துக் கொள்வதில்லை. அத்துடன் மேலதிக நேர கடமையும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முறையான மாற்றீடு திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் சுகாதார சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள்.

சம்பளத்தை அதிகரித்து மேலதிக கொடுப்பனவை இரத்துச் செய்தால் எவரும் பயனடையமாட்டார்கள். ஆகவே பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு மணித்தியாலக் கணக்கில் பேசிக் கொண்டிருக்காமல், சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள். அனைத்துக்கும் எதிர்க்கட்சிகளை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பிரச்சினைகளுக்கு பேசி தீர்வு காணுங்கள் என்றார்.

No comments:

Post a Comment