சவூதி மன்னரின் விருந்தினராக 16 இலங்கையர்கள் உம்ரா பயணம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 1, 2025

சவூதி மன்னரின் விருந்தினராக 16 இலங்கையர்கள் உம்ரா பயணம்

சவூதி அரேபிய மன்னரும் இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின் விருந்தினர்களாக உம்ரா கடமையினை நிறைவேற்றும் நோக்கில் 16 இலங்கையர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் சிபாரிசுக்கு அமையவே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (27) புனித மதீனா நகரை சென்றடைந்த இவர்கள், வெள்ளிக்கிழமை (28) புனித மஸ்ஜிதுன் நபவியில் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபட்டதுடன் புனித அல்குர்ஆன் அச்சிடப்படும் இடம், குபா பள்ளிவாசல், உஹது யுத்தம் நடைபெற்ற இடம் எனப் பல இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். 

அதன் பின்னர் உம்ரா கடமையினை நிறைவேற்ற புனித மக்கா நகருக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபிய மன்னரும் இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின் விருந்தினராக உம்ரா கடமையினை மேற்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டம் இந்த வருடம் இரண்டாவது தடவையாக இடம்பெறுகின்றது. இதற்காக 66 நாடுகளிலிருந்து 1,000 யாத்திரீகர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் 4ஆவது குழவினரே தற்போது புனித மதீனா நகரை சென்றடைந்துள்ளனர். 

இக்குழுவில் இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ், துருக்கி, இலங்கை, நேபாளம், மாலைதீவு, தாஜிகிஸ்தான், அஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த 250 விருந்தாளிகள் உள்ளடங்கியுள்ளனர்

சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ஆகியோரின் வழிகாட்டலில் அந்நாட்டு வழிகாட்டல் அழைப்பு மற்றும் இஸ்லாமிய விவகார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி அஷ்ஷேய்க் அப்துல் லதீப் பின் அப்துல்லாஹ் அல் ஷெய்க் தலைமையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

vidiyal.lk

No comments:

Post a Comment