USAID நிறுவனம் செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரிய விடயம் : ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமையுங்கள் என்கிறார் நாமல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 11, 2025

USAID நிறுவனம் செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரிய விடயம் : ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமையுங்கள் என்கிறார் நாமல்

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் ஆண் - பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு USAID நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும். இது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் USAID என்ற அரச சார்பற்ற நிறுவனம் 7.9 மில்லியன் டொலரை செலவழித்து ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு பயிற்சி வழங்கியுள்ளதாகவும், ஆண் மற்றும் பெண் பாலினத்தை பயன்படுத்தி அழைக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் உள்ளக மட்டத்தில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் 'இலங்கை, பங்களாதேஸ், உக்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 09 நாடுகளின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக USAID என்ற அரச சார்பற்ற நிறுவனம் 260 மில்லியன் டொலரை செலவு செய்துள்ளதாக' பதிவேற்றம் செய்துள்ளார்.

இதற்கு முன்னரும் இலங்கையில் சட்டத்தின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டின் இன நல்லிணக்கம், தேசியத்தை வீழ்த்தும் வகையில் செயற்பட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் ஆண் - பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு இந்த நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும்.

இலங்கையில் போராட்ட காலத்தில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஆராய வேண்டும்.

அத்துடன் இந்த நிதியை பெற்றுக் கொண்ட நபர் அல்லது நிறுவனங்கள் தொடர்பிலும், அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை ஆராய்வது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாததாக அமையும்.

ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு வலியுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment