(எம்.எப்.எம்.பஸீர்)
போதைப் பொருள் தொடர்பிலான சந்தேகநபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் என பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட டேன் பிரியசாத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கமுவ நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (11) உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 2024 ஆம் ஆண்டு போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்ய வேண்டாம் என நான்னெரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் நிக்கவெரட்டிய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணைகளின் அறிக்கைகள் கல்கமுவ நீதவான் நீதிமன்றில் முன்னெடுத்துவரும் விசாரணைக்கு அமைய கல்கமுவ நீதவான் நீதிமன்றில் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரான டேன் பிரியசாத் என அழைக்கப்படும் அபேரத்ன லியனகே சுரேஷ் பிரியசாத் என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் சந்கேநபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அவர் நேற்றையதினம் (12) துபாயிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
பின்னர் அவர் நிக்கவெரட்டிய பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதுடன் அவர் விசாரணை அதிகாரிகளால் நேற்று கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க சந்தேகநபர் நிகவெரட்டிய பிராந்திய குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
No comments:
Post a Comment