USAID இடமிருந்து நிதி பெற்றோர் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க தெரிவுக்குழுவை அமையுங்கள் - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

USAID இடமிருந்து நிதி பெற்றோர் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க தெரிவுக்குழுவை அமையுங்கள் - விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான்)

USAID நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்ட இலங்கையின் தேசிய முகவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் அரசியல் மற்றும் சிவில் கட்டமைப்பில் மேற்குலக நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளின் நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குறிப்பிட்டோம்.

சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட் முகவராண்மை (USAID) இலங்கையின் அரசியல் விவகாரங்களின் தலையீடு செயவது பல விடயங்களில் உறுதிப்படுத்தப்பட்டது.

நாங்கள் மேற்குலகத்தை விமர்சித்துக் கொண்டு இந்த நிறுவனங்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக ஒருசிலர் குறிப்பிட்டனர். ஆனால் இன்று நாங்கள் குறிப்பிட்டதை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

USAID பிற நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனம் இலங்கையில் பாலின மாற்றம், பால்புதுமையினர் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பற்றறைகளை நடத்துவதற்கு பெருந்தொகையான நிதியை செலவிட்டுள்ளது.

பாலின சமத்துவத்துக்காக ஆண் மற்றும் பெண் பாலினத்தை விழிப்பதற்கு புதிய வார்த்தைகளையும் அறிமுகப்படுத்தின.

இலங்கையின் பௌத்த மத கோட்பாட்டுக்கும், இயற்கைக்கு முரணான வகையிலும் USAID முன்னெடுத்த திட்டங்களுக்கு பாக்கியசோதி சரவணமுத்து, ஜெஹான் பெரேரா ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் USAID இன் செயற்பாடுகளை இடைநிறுத்தியதை தொடர்ந்து இவர்கள் கலக்கமடைந்து திணறுகிறார்கள். இவர்கள் டொலருக்காக நாட்டுக்கு எதிராகவும் யுத்த காலத்தில் செயற்பட்டுள்ளார்கள்.

USAID நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்ட இலங்கையின் தேசிய முகவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிக்கக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment