கடந்த 8 வாரங்களாக அபாயகரமான நிலைமை ஏற்படவிருந்தமையை அறிந்திருந்தும் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கவில்லை? - கேள்வியெழுப்பியுள்ள அஜித் பி பெரேரா - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

கடந்த 8 வாரங்களாக அபாயகரமான நிலைமை ஏற்படவிருந்தமையை அறிந்திருந்தும் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கவில்லை? - கேள்வியெழுப்பியுள்ள அஜித் பி பெரேரா

(எம்.மனோசித்ரா)

தேசிய மின் கட்டமைப்பில் இவ்வாறு சமநிலையற்ற நிலை ஏற்படுவதாக கடந்த 8 வாரங்களாக மின்சார சபை பொறியியலாளர்களால் மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு அபாயகரமான நிலைமை ஏற்படவிருந்தமையை அறிந்திருந்தும் அமைச்சரால் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கேள்வியெழுப்பினார்.

திங்கட்கிழமை (10) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு குரங்குகள்தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையே காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. இறுதியில் நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகளின் செயலிழப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மின்சக்தி அமைச்சர் இவை அனைத்துக்கும் அப்பால் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவித்தார்.

அவ்வாறெனில் இவ்வாறான நிலைமை ஏற்படும் வகையில் கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன? தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் சூரிய மின் உற்பத்தியின் ஊடாக 1,300 மெகாவோல்ட் மின்சாரத்தை இணைத்தமை தவறான தீர்மானமா?

கடந்த ஆட்சி காலங்களில் இந்த துறையில் பொறுப்புக்களை வகித்தவர்கள் என்ற ரீதியில் எம்மால் கேட்கப்படும் இந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

கடந்த 8 வாரங்களாக தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. ஒருபுறும் ஞாயிற்றுக்கிழமை மின்சாரப் பாவனை குறைவடைந்து காணப்பட்டதோடு, மறுபுறம் சூரிய மின் உற்பத்தி அதிகபட்சமாகக் காணப்பட்டது.

தேசிய மின் கட்டமைப்பில் இவ்வாறு சமநிலையற்ற நிலை ஏற்படுவதாக அது குறித்து நாளாந்தம் கண்காணித்து வந்த பொறியியலாளர்கள் அமைச்சருக்கு புதுப்பிக்கப்பட்ட நிலைமைகளை தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

அந்த வகையில் இரு மாதங்களாக இது தொடர்பில் மின்சக்தி அமைச்சரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முன்னரே அறிந்திருந்த தகவல்களின் அடிப்படையில் மக்களை அறிவுறுத்தியிருந்தால் அசௌகரியங்களையாவது குறைத்திருக்கலாம். ஆனால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திகளை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்தமையை தேசிய குற்றமாக்கும் வகையிலேயே இவர்களது கருத்துக்கள் காணப்படுகின்றன.

தொடர்ச்சியாக 8 ஞாயிற்றுக்கிழமைகளாக தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையற்ற நிலை ஏற்படுவதை அறிந்திருந்தும் ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உண்மையில் இந்த பிரச்சினைக்கு அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் தேவையில்லை. மின்சார பொறியியலாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment