அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI இன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
FBI இன் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமனம் நேற்று (20) மேலவையால் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஷ் படேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
FBI இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரலுக்க காஷ் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்திய புலனாய்வு அமைப்பின் 9 வது இயக்குநராக நியமிக்கப்பட்டதற்காக நான் பெருமையடைகிறேன்.
இதற்காக ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரல் போன்டி ஆகியோரின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நாட்டைப் பாதுகாப்பதில் FBI அமைப்புக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது.
வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய, நீதிக்கு உறுதியளிக்கும் ஒரு மத்திய புலனாய்வு அமைப்பினைப் பெறுவதற்கு அமெரிக்க மக்கள் தகுதியானவர்கள். ஆனால், அண்மைக்காலமாக நமது நீதி அமைப்பு அரசியல் மயமாக்கப்பட்டது. இதனால் பொதுமக்களிடம் நம்பிக்கையை அது இழந்து விட்டது. அந்த அவநம்பிக்கை இன்றுடன் முடிவடைகிறது. FBI தலைவராக எனது இலக்கு தெளிவானது. அது FBI இன் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே.
அமெரிக்கர்களுக்கு தீங்கிழைப்பவர்களே இதை உங்களுக்கான எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். கடமைக்கே முக்கியத்துவம். அமெரிக்காவுக்கே முன்னுரிமை. நம் வேலையைத் தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளரான காஷ் படேல், மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டதாக மேலவை உறுப்பினர்களால் வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டார்.
காஷின் நியமனத்துக்கு குடியரசுக் கட்சியின் மேலவை உறுப்பினர்கள் அலாஸ்காவின் லிசா முர்கோவ்ஸ்கி மற்றும் மைனேயின் சுசன் கால்லின்ஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் மேலவையின் சிறுபான்மையினத் தலைவர் மிட்ச் மெக்கான்னல் உள்ளிட்ட பிற குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் காஷை ஆதரித்தனர்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அனைத்து மேலவை உறுப்பினர்களும் காஷுக்கு எதிராக வாக்களித்திருந்தால், FBI இயக்குநராக அவரின் உறுதிப்படுத்துதல் வெற்றி 51 - 49 என்ற சிறிய வித்தியாசத்திலேயே கிடைக்கப் பெற்றது.
No comments:
Post a Comment