இழப்புக்களை ஏற்படுத்தியவர்களே தற்போது விமர்சிக்கின்றனர் : தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம், நீதிமன்றம் செல்வோம் - பிரேம்நாத் சி தொலவத்த - News View

About Us

About Us

Breaking

Sunday, February 9, 2025

இழப்புக்களை ஏற்படுத்தியவர்களே தற்போது விமர்சிக்கின்றனர் : தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம், நீதிமன்றம் செல்வோம் - பிரேம்நாத் சி தொலவத்த

(எம்.மனோசித்ரா)

இழப்புக்களை ஏற்படுத்தியவர்கள்தான் தற்போது நாம் இழப்பீடுகள் பெற்றுக் கொண்டமையை விமர்சிக்கின்றனர். எமது இல்லங்களை தீக்கிரையாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள், அதற்கு தூண்டியவர்களை நாம் இனங்கண்டுள்ளோம். அவர்களுக்கெதிராக நீதிமன்றம் சென்று அவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றக்கிழமை (9) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அரசியல்வாதிகள் சொத்து சேதங்களுக்காக பெற்றுக் கொண்ட இழப்பீடு குறித்து பெரிதாக பேசும் ஜே.வி.பி. 1980 களில் பாரியளவில் அரச சொத்துக்களுக்கு சேதப்படுத்தியதை மறுக்க முடியாது. அந்த சந்தர்ப்பத்திலும் அவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

இம்முறையிலும் இவ்வாறு அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலான சந்தேகநபர்கள் ஜே.வி.பி. ஆதரவாளர்களே. அவர்கள் சேதங்களை ஏற்படுத்தியமைக்கு இவர்களே முன்னின்று வழிகாட்டினர்.

எனது வீட்டை மீளப் புனரமைப்பதற்கும், அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கும் 23 இலட்சம் இழப்பீடு கிடைக்கப் பெற்றது. எனது வீடு சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டத்தரணி என்ற ரீதியில் இது தொடர்பில் என்னால் பல்வேறு தகவல்களை சேகரிக்க முடிந்தது. அந்த வகையில் எனது வீட்டின் அமைவிடத்தைக் கூறியது யார், அதனை சேதப்படுத்துமாறு வழிகாட்டியது யார் என்பது குறித்த முழுமையான அறிக்கை எம்மிடமுள்ளது.

அவ்வாறிருக்கையில் இழப்பை ஏற்படுத்திய இவர்கள்தான் தற்போது எமக்கு கிடைக்கப் பெற்ற இழப்பீடு குறித்து விமர்சிக்கின்றனர். தாக்குதல்களை மேற்கொள்ள முன்னர் அதற்கு ஒத்துழைத்தவர்களை நாம் இனங்கண்டுள்ளோம். அதற்கமைய நான் அவர்கள் மீது மனுத்தாக்கல் செய்து அவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பேன். இதற்கு காரணமான அனைவரையும் நாம் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் மாத்திரமின்றி, 141 கோடி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியவர்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சட்டமா அதிபரிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அரசாங்கம் சட்டமா அதிபர் மீது பாரிய அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கிறது.

உள்ளுராட்சி மன்ற வேட்மனு தொடர்பில் வழக்கு தீர்ப்பினை நீதிமன்றம் அறிவிக்க முன்னரே, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ தீர்ப்பு வெளியிடும் தினத்தை அறிவிக்க முற்படுகின்றார்.

பொலிஸ் ஆணைக்குழு, நீதிமன்றம், நீதிமன்ற தீர்ப்பின் மீது கூட அரசாங்கத்தின் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இது மிகவும் அபாயம் மிக்க நிலைமையாகும்.

ஏற்பட்ட சேதத்தில் ஐந்தில் ஒரு பங்கு மாத்திரமே கிடைத்துள்ளது. நான் வசிப்பது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரம்பரை இல்லமாகும். எனவே அது தொடர்பில் எந்த மதிப்பீடுகளை முன்னெடுத்தாலும் நான் அஞ்சப்போவதில்லை. அதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவேன். ஆனால் மதிப்பீட்டு அறிக்கைகளை மறைத்து வைத்திருக்காது அவற்றை நாட்டுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment