தாமதங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் : ஒரு தரப்பினரை மட்டும் குறை கூற முடியாது - சமூக நீதிக்கான தேசிய இயக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2025

தாமதங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் : ஒரு தரப்பினரை மட்டும் குறை கூற முடியாது - சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

ஒரு நாட்டின் சுமூகமான இருப்புக்கு இன்றி அமையாத செயல்முறையாகக் கருதக்கூடிய நீதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்பதை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுனில் ஜயசேகர தெரிவித்துள்ளதாவது, நீதிச்சேவை ஆணைக்குழுவை மேற்கோள் காட்டிய ஊடக அறிக்கைகளின்படி, இலங்கை நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், உயர் நீதிமன்றத்தில் 5,600 வழக்குகள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,000, சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 6,100, மேல் நீதிமன்றங்களில் 28,000, மாவட்ட நீதிமன்றங்களில் 254,000, நீதிவான் நீதிமன்றத்தில் 791,000 வழக்குகள் குவிந்து உள்ளதாக அறிக்கைகள் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கான காரணங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இவை கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நிலைமைகள் என்பது இரகசியமல்ல, எனவே இதற்கு ஒரு தரப்பினரை மட்டுமே குறை கூற முடியாது.

இருப்பினும், இந்த தொடர்ச்சியான நிலைமை இந்த நாட்டு மக்களின் நல்வாழ்விலும், ஒரு நீதியான சமூகத்திற்கான அபிலாஷைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையைக் அவதானிக்கையில் நீதி தேடி நீதிமன்றங்களை அணுகும் ஒருவர் தீர்வு காண மூன்று தலைமுறை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு தேசமாக, இந்த துரதிர்ஷ்டவசமான சூழலை மாற்றி அதை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதில் நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

இது புதிய அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, தற்போதைய நீதி அமைச்சருக்குமான பாரிய சவால் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதை முறியடிப்பது முழு தேசத்தின் பொறுப்பாகும். அனைத்து தரப்பினரின் கவனமும் தாமதமின்றி இவ்விடயத்தின் மீது ஈர்க்கப்படும் என நாங்கள் நம்புகிறோம் என்றுள்ளது.

No comments:

Post a Comment