அரசாங்கம் நிர்ணயித்துள்ளமை வரவேற்கத்தக்கது : நேரம் கிடைக்கும்போது குறிப்பிடுகிறோம், திணற வேண்டாம் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2025

அரசாங்கம் நிர்ணயித்துள்ளமை வரவேற்கத்தக்கது : நேரம் கிடைக்கும்போது குறிப்பிடுகிறோம், திணற வேண்டாம் - நாமல் ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் 120 ரூபாவாக நிர்ணயித்துள்ளமை வரவேற்கத்தக்கது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, காலம் கடந்த பின்னராவது நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் 120 ரூபாவாக நிர்ணயித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இருப்பினும் உத்தரவாத விலையை நிர்ணயிப்பதற்கு முன்னரே ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் வேறு வழியில்லாத காரணத்தால் நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள்.

விவசாயிகள் வெற்றிலை போடும் செலவையும் இணைத்துதான் நெல்லுக்கான உத்தரவாத விலையை கோருவதாக குறிப்பிட்ட விவசாயத்துறை பிரதி அமைச்சர் கடந்த காலங்களில் விவசாயிகளுடன் ஒன்றிணைந்து வெற்றிலை சாப்பிட்டதை மறந்து விட்டார்.

செலவுகளை நிர்ணயிப்பதால் உத்தரவாத விலையை நிர்ணயிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஆனால் கடந்த காலங்களில் பெரும்போக விவசாயம் முடிவடைந்ததன் பின்னரே இவர்கள்தான் செலவுகளை நிர்ணயிக்காமலே மனக்கணக்கில் உத்தரவாத விலையை குறிப்பிட்டுக் கொண்டு வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

வாகன இறக்குமதி தற்போதைய பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி கடந்த காலங்களில் 12 இலட்சத்துக்கு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிட்டது. ஆனால் இன்று அவ்வாறில்லை.

ஆகவே தேர்தல் காலத்தில் மனதுக்கு தோன்றுவதை இலகுவில் குறிப்பிடலாம், ஆனால் அவற்றை செயற்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் இனியாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவரும் அதற்கு பதிலளித்தார். ஆனால் அவரது பதிலில் குரங்கு தொல்லை, தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பால் பற்றி குறிப்பிடப்படவில்லை.

குரங்குகள் தேங்காயை அழிப்பதால் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது.

பின்னர் தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பால் பயன்பாட்டுக்கு தேங்காய் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால்தான் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அடிப்படை பிரச்சினைகளுக்கு சாத்தியமற்ற விடயங்களையே அரசாங்கம் குறிப்பிடுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் தற்போது தொழிலின்மை பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் என்ன தீர்வு உள்ளது. தொழில் வாய்ப்பு உருவாக்கத்துக்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கிராமத்துக்கு கிராமம் சென்றதை போன்று தற்போதைய ஜனாதிபதியும் செல்கிறார். அதுவும் நல்லதே இருப்பினும் மக்கள் மத்தியில் செல்லும்போது அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வுடன் செல்ல வேண்டும். அதனை விடுத்து கடந்த காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போதும் மக்களிடம் வெறுப்பை விதைக்கக்கூடாது.

மக்கள் மத்தியில் பிரச்சினைகளை குறிப்பிட வேண்டாம், ஏனெனில் நீங்கள்தான் ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணித்தியாலங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டீர்கள்.

துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் அலட்சியமாக செயற்படுகிறது. யார் அந்த கொள்கலன்களை இறக்குமதி செய்தது. அதில் என்ன உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதை அரசாங்கம் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இதனால்தான் மாகாண ஆளுநர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அரசாங்கம் சிறந்த முறையில் புரிந்துணர்வுடன் பொய்யுரைப்பதற்கு தேர்ச்சி பெற்றது. பொய்யை நீங்கள் சொல்லி விட்டு அது பொய் என்று வெளிப்பட்டவுடன் எதிர்க்கட்சியான எங்களை விமர்சிப்பது பயனற்றது. இன்னும் பல விடயங்கள் உள்ளன. நேரம் கிடைக்கும்போது குறிப்பிடுகிறோம். திணற வேண்டாம்.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் முகவராண்மையின் செயற்பாட்டை நிறுத்துவதற்கு அமெரிக்காவின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த முகவராண்மை இலங்கையில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் முகவராண்மை பிற நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆகவே இலங்கையில் இந்த முகவராண்மையின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்ட 100 இற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்னவென்று கேள்வியெழுப்பினார்.

No comments:

Post a Comment