(எம்.வை.எம்.சியாம்)
நாட்டில் கடந்த கால காலங்களில் நீதித்துறை கட்டமைப்பின் மீது அரசியல் தலையீடு எவ்வாறு இருந்தது என்பதை நாம் அறிவோம். எனினும் எமது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை. அவர் அரசியலமைப்புக்கு அமையவே செயற்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாம் முன்னெடுத்துவரும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் ஜனாதிபதி பதவி முதல் பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு வரை ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த நாட்டை ஆளும் மூன்று பிரதான நிறுவனங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே எமக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினருக்கு நாம் சவால் விடுக்கிறோம். பாராளுமன்றத்தில் 159 பேர் உள்ளோம். நாம் பொறுப்பேற்ற இந்த குறுகிய காலப்பகுதிக்குள் எமக்கு எதிராக ஒரு ஊழல் மோசடி குற்றச்சாட்டையேனும் ஆதாரங்களுடன் முன்வைக்குமாறு நாம் அவர்களுக்கு சவால் விடுக்கிறோம்.
கேள்வி
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறதல்லவா?
பதில்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் எமது ஜனாதிபதி தலையீடு செய்யப்போவதில்லை. கடந்த காலங்களில் இந்த திணைக்களங்கள் மீது அரசியல் தலையீடு எவ்வாறு இருந்தது என்பதை நாம் அறிவோம்.
தாம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக நாமல் ராஜபக்ஷவின் தந்தை ஒரு வர்த்தமானி அறிவித்தலில் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
அதேபோன்று சசீந்திர ராஜபக்ஷவுக்கு முதலமைச்சர் பதவியையும், பஸ்நாயக நிலமே பொறுப்பினையும் ஒன்றாக வகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டபோது அதற்கேற்றவாறு சட்டங்களை மாற்றி அமைத்தார்கள்.
அவர்கள் இவ்வாறே சட்டத்தில் தலையீடு செய்தார்கள். ஆனால் எமது ஜனாதிபதி அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு செயற்படக்கூடிய ஒருவர் என்றார்
No comments:
Post a Comment