சட்டமா அதிபருக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றுங்கள் : பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள லசந்த விக்கிரமதுங்கவின் மகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2025

சட்டமா அதிபருக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றுங்கள் : பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள லசந்த விக்கிரமதுங்கவின் மகள்

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பிலான குற்றவியல் விசாரணைகள் தொடர்பில் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு தனது கடமையை புறக்கணித்த சட்டமா அதிபருக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு இன்று (06) எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மவுண்ட்லவேனியா நீதிமன்றம் வழக்கு எண் B 92/2009 இன் கீழ் சந்தேகநபர்கள் என குறிப்பிட்ட மூவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பதற்கு கடந்த வாரம் சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானம் குறித்து நான் ஆழ்ந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.

சட்டமா அதிபரின் இந்த தீர்மானத்தை மறு ஆய்விற்கு உட்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து நான் நன்றியுடையவளாக உள்ளேன்.

அரசியல் தலையீடு அற்ற சுதந்திரமான குற்றவியல் நீதிமுறையை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.

தனது அறிவிப்பினால் அரசியல் ஆபத்துக்கள் உருவாகலாம் என்ற போதிலும் தேசிய மக்கள் சக்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனினும் சட்டமா அதிபர் தனது முடிவை மாற்றுவதற்கு போதுமான அழுத்தங்களை கொடுப்பது மாத்திரம் போதுமானது என அரசாங்கம் கருதுகின்றது என அஞ்சுகின்றேன்.

கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்கள் சட்டமா அதிபரின் தீர்மானம் ஒரு விபத்து அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது அப்பாவிதனமான தவறில்லை. 

இது சட்டமா அதிபர் திணைக்களத்தில் சட்டமா அதிபர் பரவுவதற்கு அனுமதித்துள்ள கலாச்சாரத்தின் விளைவு. இது ஒழுங்கற்ற கலாச்சாரம், தன்னிறைவு மேலும் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கடமையை முற்றாக புறக்கணித்தல்.

எனது தந்தை பணிக்கு சென்றுகொண்டிருந்த வேளை 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வழிமறித்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ரத்மலானை விமானப்படை தளத்தை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இந்த தாக்குதல் பட்டப்பகலில் இடம்பெற்றது.

அவரை கொலை செய்தவர்கள் முகாமை நோக்கி தப்பியோடினார்கள் இன்றுவரை அவர்கள் அடையாளம் காணப்படவில்லை.

2015 இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிஐடியினரிடம் ஒப்படைக்கப்படும் வரை இந்த கொலை குறித்தோ இதனை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் குறித்தோ தீவிரமான நம்பகத்தன்மை மிக்க விசாரணைகள் இடம்பெறவில்லை.

2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளின்போது சிஐடியினர் நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர், மிகப்பெருமளவு ஆதாரங்களை பெற்றுக் கொண்டனர்,.

எனது அறிவுக்கு எட்டிய வரையில் சிஐடியினரின் வரலாற்றில் வேறு எந்த விசாரணையும் இவ்வளவு துல்லியமாக இடம்பெற்றதில்லை.

இந்த குற்றங்கள் ஏன் எப்படி மறைக்கப்பட்டன என்பதை கண்டுபிடிப்பதன் மூலமே எனது தந்தையின் கொலை குறித்த மர்மங்களை பல வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்க முடியும் என்பதை சிஐடியினர் உணர்ந்திருந்தனர்.

இதனடிப்படையில் சிஐடியினர் எனது தந்தையின் வாகன சாரதி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் அவர்கள் சந்தேகநபரின்  உருவம் குறித்த படத்தினை மவுன்ட்லவேனியா நீதவானின் அனுமதியுடன் பிரசுரித்தனர்.

அவர்கள் சந்தேகநபர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேமானந்த உடலகமவை கைது செய்தனர். அடையாள அணிவகுப்பில் அவர் அடையாளம் காணப்பட்டார் எனவும் அஹிங்சா விக்ரமதுங்க தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை முன்வைத்து அவரை பதவிநீக்கம் செய்வதே நீதிக்கான அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி எனவும் அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment