(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சட்டபீடம் ஸ்தாபிப்பதற்கான பரிந்துரைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தர கட்டமைப்புக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படும் பட்டப்படிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பதிலளித்ததாவது, இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகிய நான்கு அரச பல்கலைக்கழகங்கள் ஊடாக சட்டமாணி பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 740 பேர் சட்டமாணி பட்டப்படிப்பையும், பேராதனை பல்கலைக்கழகத்தில் 197 பேர் சட்டமாணி பட்டப்படிப்பையும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் 212 பேர் சட்டமாணி பட்டப்படிப்பையும், திறந்த பல்கலைக்கழகத்தில் 1625 பேர் சட்டமாணி பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தை ஸ்தாபிப்பதற்கான பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டு தற்போது தரவு கட்டமைப்புக்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. வெகுவிரைவில் புதிய சட்டபீடம் ஸ்தாபிக்கப்படும்.
சட்டக் கல்லூரி கல்வி அமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடங்காது. சட்டக் கல்லூரி சுயாதீன முறையில் செயற்படுகிறது. ஒரு சில தனியார் நிறுவனங்கள் எவ்விதமான கொள்கை மற்றும் கண்காணிப்புக்கள் ஏதும் இல்லாமல் செயற்படுகின்றன. பட்டங்களும் வழங்கப்படுகின்றன.
ஆகவே இவ்வாறு செயற்படும் நிறுவனங்கள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு மட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment