பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குங்கள் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குங்கள் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி அதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று இது போன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருக்க நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த விடயத்தில் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைக்கிறோம் என பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கனேமுல்ல சஞ்சீவ நேற்று (19) முற்பகல் வழக்கொன்றுக்காக அழைத்துவரப்பட்டு சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்றுக்குள் இருந்த சந்தேகநபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற பதில் பொலிஸ்மா அதிபர் அங்கு நிலைமையையும் கேட்டறிந்து கொண்டார்.

இதையடுத்து அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதே பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சட்டத்தரணி போன்று வேடமிட்ட நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸாரின் விசாரணையில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சிசிடிவி காட்சிகள் மூலமும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டில் பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான ஆயுதங்கள் வெளியில் உள்ளன. அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

அதேபோன்று திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்போம்.

அதேபோன்று வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றன. எனவே இந்த குற்றச் செயல்களை வழிநடத்தும் தரப்பினர் மற்றும் அதனை மேற்கொள்ளும் தரப்பினரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேள்வி
இதுபோன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாது என்பதற்கு பொலிஸார் வழங்கும் உறுதி என்ன?

பதில்
நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணிகளை போன்று சந்தேகநபர்கள் உள்நுழைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் சட்டத்தரணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குற்றவாளி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். எனவே நாம் சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கிறோம். குறிப்பாக நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த உள்ளோம். எனவே இந்த விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கிறோம். அதேபோன்று இங்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

கேள்வி
இந்த வருடத்தில் 15 துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?

பதில்
இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயலாகும். இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் இதற்கு பொலிஸார் இராணுவத்தினர் ஒத்துழைப்புகளும் சந்தேகநபர்களுக்கு கிடைத்துள்ளன. எனவே இதனை எம்மால் தனித்து செய்ய முடியாது. அனைத்து பிரஜைகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். எமக்கு கிடைக்கப் பெறும் இரகசிய தகவல்கள் மூலமே இதனை நிறுத்த முடியும் என்றார்.

No comments:

Post a Comment