லாகூர், கடாபி அரங்கில் தவறுதலாக இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது குறித்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம் கேட்டுள்ளது.
அந்த வகையில், (சனிக்கிழமை) அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னர் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட நிலையில் அது உடன் நிறுத்தப்பட்டது.
இந்தத் தவறு குறித்து அதிருப்தியை வெளியிட்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதற்கு பொறுப்பாக உள்ள ஐ.சி.சி. மீது குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய அணி பாகிஸ்தான் வராத நிலையில் அதன் தேசிய கீதம் பயன்படுத்தப்பட்டது எவ்வாறு என்று அது கேள்வி எழுப்பியுள்ளது.
எனினும் தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று விளக்கம் அளித்திருக்கும் ஐ.சி.சி. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் கடந்த ஒருசில நாட்களில் பாகிஸ்தான் சபை ஐ.சி.சி. இடம் விளக்கம் கேட்பது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக டுபாயில் நடந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான இரண்டாவது போட்டியின்போது உத்தியோகபூர்வ ஒளிபரப்புக்கான இலட்சணையில் பாகிஸ்தானின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இது போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் அந்தஸ்தை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கும் தொழில்நுட்ப கோளாறை ஐ.சி.சி. காரணமாகக் கூறியபோதும் பாகிஸ்தான் அந்த விளக்கம் குறித்து திருப்தி அடையவில்லை.
No comments:
Post a Comment