பொருளாதார நெருக்கடியிலும் எந்த தரப்பினரையும் புறக்கணிக்கவில்லை - அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2025

பொருளாதார நெருக்கடியிலும் எந்த தரப்பினரையும் புறக்கணிக்கவில்லை - அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். அதற்கான திட்டங்களையும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும் வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கவில்லை என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் உரிமைகள் மற்றும் நாட்டின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வகையில்தான் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பிற நாடுகளினதும், வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது ஒரு சில நிறுவனங்களின் தேவைகளுக்காகவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக சிறைச்சாலைகள் மற்றும் சிறப்பு நிலையங்களில் உள்ள பிள்ளைகளின் நலன்கருதி பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முறையாக செயற்படுத்துவதற்கான வழிமுறைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வரி வருமானத்தை அதிகரிப்பதற்கும் விசேட திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாடு என்ற ரீதியில் முன்னேற்றடைவதற்காகவே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டன. ஆனால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. மாறாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். அதற்கான திட்டங்களையும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும் வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment