இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான நபராக கருதப்படும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதில், சட்டச் சிக்கல்கள் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சட்ட விதிகளுக்கு அமைவாக அவரை, இலங்கைக்கு நாடு கடத்த முடியாத நிலை காணப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மத்திய வங்கி நிதியிலிருந்து 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பத்து பில்லியன் ரூபா முறை கேடாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில், இவர் மீது விசாரணைகள் நடத்தப்படவிருந்தன. இதன்பொருட்டு இம்மாதம் (25) நீதிமன்றில் அர்ஜுன மகேந்திரன் ஆஜராக வேண்டியிருந்தது.
வழக்கில் ஆஜராகும் பொருட்டு அவரை நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அரசாங்கத் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, சிங்கப்பூர் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பில், இம்மாதம் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை விடுத்திருந்தது.இதற்காக கொழும்பு நீதிமன்றம் ஏற்கனவே சர்வதேச பொலிஸார் மூலம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
No comments:
Post a Comment