முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பின் ஒரு பகுதியை நீக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் மாதம் 19 ஆம் திகதி எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எவ்வித மதிப்பீடுகளையும் மேற்கொள்ளாது தமது பாதுகாப்புப் பிரிவை 60 பேராக குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று (06) உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா, சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வருணிகா ஹெட்டிகே, இந்த வழக்கு தொடர்பாக பிரதிவாதிகளிடமிருந்து ஆலோசனை பெறுவதற்கு கால அவகாசம் தேவை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அவகாசம் வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.
அதன்படி, பிரதிவாதிகள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதி அளித்த மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற குழாம், தேவைப்பட்டால் மனுதாரர் தரப்பும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது.
குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, எந்தவொரு பாதுகாப்பு மதிப்பாய்வும் இல்லாமல் தனது கட்சிக்காரரின் பாதுகாப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முறையான பாதுகாப்பு மதிப்பீட்டிற்குப் பிறகு அவரது பாதுகாப்பைக் குறைப்பதா அல்லது அதிகரிப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திலெடுத்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், குறித்த மனுவின் விடயங்களை ஆராய மார்ச் மாதம் 19 ஆம் திகதி அதனை எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.
No comments:
Post a Comment