நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடுகிறது. எடுக்கப்படும் தீர்மானங்கள் முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அதற்கு விசேட சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற அமர்வின்போது இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, சுயாதீனம் மற்றும் மக்கள் நம்பிக்கை உள்ளிட்ட அடிப்படை கொள்கைக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதனை குறிப்பிட்டுள்ளோம்.
கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்வியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 2024 ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் 12 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
குற்றச் செயற்பாடுகளை குறைப்பதற்காக தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் பாதுகாப்புக்காக முப்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் பொலிஸ் நடமாடும் சேவைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அது தொடர்பான வழிகாட்டல் அறிவுறுத்தல்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் பாதுகாப்பு குறித்து 2008 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கை இன்றும் அமுல்படுத்தப்படுகிறது. அந்த சுற்றறிக்கையையும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்படும்போது வெளியாட்களால் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. ஊடக ஒழுக்கம் மற்றும் ஊடக நெறிமுறையினை பின்பற்றும் பொறுப்பு அனைத்து ஊடகங்களுக்கும் உண்டு. அரசியலமைப்பின் 14 (அ) உறுப்புரையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள தகவலறியும் உரிமைச்சட்டத்துக்கு வரையறை விதிக்கும் நோக்கமில்லை.
வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் இலங்கையர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைதிகள் பரிமாற்றல் சட்டத்தின் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த நாடுகளின் பாதுகாப்பு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
பொலிஸ்மா அதிபருக்கும், பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. பொலிஸ் திணைக்களம் சுயாதீனமான முறையில் செயற்படுகிறது. இந்த சுயாதீனத்தன்மையில் அரசாங்கத்துக்கு எவ்விதமான சிக்கலும் கிடையாது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதிபயின் தலைமைத்துவத்தில் தேசிய பாதுகாப்பு சபை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடுகிறது.
பிரதமர், வெளிவிவகாரத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு பிரதி அமைச்சர், பொலிஸ்மா அதிபர் உட்பட ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு, நிதி, வெளிவிவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களும் தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களாக உள்ளனர்.
அதேபோல் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய படைகளின் தளபதிகளும், தேசிய புலனாய்வு மற்றும் அரச புலனாய்வு பிரிவின் பிரதானிகள் பாதுகாப்பு சபையின் இதர உறுப்பினர்களாவர்.
தேசிய பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்படவில்லை. பாதுகாப்பு விவகாரங்களுக்காக தேசிய பாதுகாப்பு சபையை எச்சந்தர்ப்பத்திலும் கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு சபையில் எடுக்கும் தீர்மானங்கள் முறையாக செயற்படுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment