தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையால் தற்போது நாடளாவிய ரீதியில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (09) முற்பகல் 11.15 மணி அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, மின் தடை காரணமாக சமிக்ஞை விளக்குகள் செயற்படாமையால் மக்கள் ரயில் பாதைகளை கடக்கும் போது அவதானமாக இருக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையம், சப்புகஸ்கந்த மற்றும் ஆனியாகந்த பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின் சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடைபட்ட மின்சார விநியோகம் மீண்டும் கிடைக்கும் வரை, வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று (09) மாலை 4.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் மின்சாரம் மீண்டும் கிடைக்கும் வரை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை (NWRDB) கேட்டுக்கொள்கிறது.
மேலும், ரயில் நிலையங்களில் அறிவிப்புகளை வெளியிட முடியாத நிலையில், ரயில்களை அடையாளம் காண முடியாமல் பயணிகள் சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment