(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரச நிதியை மோசடி செய்துள்ளார். அடிப்படை காரணிகள் ஏதுமில்லாமல் 39 ஜனாதிபதி ஆலோசகர்களை நியமித்தார். இவர்கள் செய்த வேலை ஏதும் கிடையாது. ஆனால் அவர்களுக்கு அதிகளவில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் மக்களின் வரிப் பணத்தை மோசடி செய்த ஒரு செயற்பாடாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் அரச நிதி செலவுகளை இயலுமான வகையில் குறைத்துள்ளோம். அரச தலைவர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். மக்களின் வரிப் பணத்தை அவதானத்துடன் பயன்படுத்துகிறோம்.
அரச நிதி மோசடி மற்றும் வீண்விரயத்தினால்தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. வங்குரோத்து நிலையிலும் கடந்த காலங்களில் மோசடிகளும், அரச சலுகைகளும் குறைக்கப்படவில்லை. மக்களின் மீதே ஒட்டு மொத்த சுமையும் சுமத்தப்பட்டது.
ஆட்சியாளர்கள் தமக்கும், தமது ஆதரவளார்களுக்கும் தேவையான சலுகைகளை ஒதுக்கிக் கொண்டு மக்கள் தமது செலவுகளையும், தேவைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
2022 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ பதவியை விட்டு தப்பியோடியதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க புண்ணியத்துக்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இவர் படித்தவர், சிறந்தவர் என்று புகழ்ந்தார்கள். ஆனால் அவர் திருடர், மோசடியாளர் என்று நான் குறிப்பிடுகிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 39 ஆலோசகர்கள் இருந்தார்கள். ஜனாதிபதிக்கு ஆலோசகர்கள் இருக்கலாம் அதில் பிரச்சினையொன்றுமில்லை. ஏனெனில் ஜனாதிபதி அனைத்தையும் அறியமாட்டார்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க 39 ஆலோசகர்களை வைத்துக் கொண்டுள்ளார். அவ்வாறாயின் அவருக்கு ஏதும் தெரியாதா, தமது நண்பர்களை மகிழ்விப்பதற்காக தற்காலிக பதவிகளை வழங்கியுள்ளார்.
அமைச்சின் செயலாளர்களின் விடயதானங்களுக்கு உள்ளடங்கும் பணிகளுக்காகவே ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆலோசகர்கள் செய்த வேளையை ஆராய்ந்து பார்த்தேன், அவர்கள் பொய்யாக கூட வேலை செய்யவில்லை. வேலை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது என்னவென்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதிக சம்பளத்தையும், சலுகைகளையும் முறையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் ஆசுமாரசிங்க பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அவர் இவருக்கு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவ்வாறாயின் இது பாரிய நிதி மோசடியல்லவா?
அதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்குரிய விடயதானங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக சாகல காரியவசம் செயற்பட்டார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் இவருக்கு என்ன புலமை உள்ளது. ஜனாதிபதி ஆலோசகர்களுக்காக மக்களின் வரிப்பணம் அதிகம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
எமது சம்பளம் பற்றி பேசப்படுகிறது. சுய விருப்பத்துடன்தான் கட்சியின் பொது நிதியத்துக்கு வழங்குகிறோம். அந்த நிதி மக்களின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது செலவுகளை இயலுமான வகையில் குறைத்து அவற்றை மக்களின் பொதுப் பணிகளுக்காக வழங்கியுள்ளார்கள் என்றார்.
No comments:
Post a Comment