(எம்.மனோசித்ரா)
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற 58 குழுக்களும், அவற்றை பின்பற்றுகின்ற 1400 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். சமூகத்தில் ஆயுத புலக்கம் அதிகரித்துள்ளதால் அவற்றால் இடம்பெறக்கூடிய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரி-56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு காணப்பட்ட அரசியல் பாதுகாப்பு காரணமாக அவர்களை பொலிஸ் சேவைகளில் இணைத்துக் கொள்ளக்கூடிய நிலைமை கூட காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த அரசியல் பாதுகாப்பு நீங்கியுள்ளது.
தமது குற்றச் செயல்களை தொடர்ந்தும் இந்நாட்டுக்குள் முன்னெடுக்க முடியாது என்பதை உணர்ந்ததால்தான் அவர்கள் வெளிநாடுகளிலிருந்து இவற்றை வழிநடத்துகின்றனர்.
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற 58 குழுக்களும், அவற்றைப் பின்பற்றுகின்ற 1400 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். இவை முறைப்படி பட்டியலிடப்பட்டுள்ளதோடு, அவற்றுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குபவர்கள் தொடர்பிலும் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.
இவற்றை வழிநடத்தும் பிரதான சந்தேகநபர்கள் வெளிநாடுகளிலிருக்கின்றனர். அவர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புக்களுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 18 கத்திக்குத்து அல்லது வாள் வெட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து அல்லது வாள் வெட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களில் நேரடியாக அல்லது மறைமுகமாக பொலிஸ் மற்றும் முப்படையிலுள்ள சிலரின் ஒத்துழைப்புக்களும் கிடைத்துள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய இரு பொலிஸார், ஒரு இராணுவ அதிகாரி, இராணுவத்திலிருந்து விலகிய 7 பேர், ஒரு விமானப்படை அதிகாரி ஆகியோர் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் தொடக்கம் இதுவரையில் 13 ரி-56 ரக துப்பாக்கிகள், 21 பிஸ்டல்கள், 15 ரிவோல்வர்கள், ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 805 வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடி மருந்துகள், 75 போர 12 ரக துப்பாக்கிகள், 10 நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு 309 கிலோ கிராம் ஹெரோயின், 97 கிலோ கஞ்சா, 123 கிலோ கேரள கஞ்சா, 312 கிலோ கஞ்சா பொட்டளங்கள், 383 கிலோ ஐஸ் போதைப் பொருள், 6430 லீற்றர் சட்ட விரோத மதுபானம் என்பனவும் பொலிஸாரின் சுற்றிவளைப்புக்களில் கைப்பற்றப்பட்டுள்ளன.
சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 19 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதற்கமைய 199 சிவப்பு அறிவிப்புக்கள், 90 நீல அறிவிப்புக்கள், 4 மஞ்சள் அறிவிப்புக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளிலிருந்து இயக்கப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் 239 தொலைபேசிகள், 145 சிம் அட்டைகள், 1430 கிராம் ஐஸ் போதைப் பொருள், 5 கிராம் ஹெரோயின் 400 போதை மாத்திரைகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலேயே இந்த குழுக்களின் செயற்பாடுகள் அதிகமாகவுள்ளன. எனவே இம்மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல முடியாதவாறு கடற்பகுதிகளிலும் கடற்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஆயுத புலக்கம் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பில் தாம் அறிந்த தகவல்களை பாதுகாப்புத் துறையினருக்கு வழங்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கும் இருக்கிறது.
இவ்வாறான தகவல்களை 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும். தகவல் வழங்குபவர்களின் தனித்துவத்தன்மை பாதுகாக்கப்படும். ரி-56 ரக துப்பாக்கி தொடர்பில் தகவல்களை வழங்கி, அவை கைப்பற்றப்பட்டால் அந்த தகவலை வழங்கியவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment